Mob lynching: மத்திய பிரதேசம்: பசுவை வெட்டியதாக சந்தேகம்.. பழங்குடியினர் இருவரை படுகொலை செய்த கும்பல்

மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் பசுவை வெட்டியதாக ஏற்பட்ட சந்தேகம் காரணமாக பழங்குடியினத்தைச் சேர்ந்த இருவர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் பசுவை வெட்டியதாக ஏற்பட்ட சந்தேகம் காரணமாக பழங்குடியினத்தைச் சேர்ந்த இருவர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Continues below advertisement

சுமார் 15 முதல் 20 பேர் வரை தங்களைத் தாக்கியதாக காயமடைந்த நபர் அப்பகுதி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்துள்ளதோடு, இதில் பஜ்ரங் தள் அமைப்பினருக்குத் தொடர்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அங்கு விரைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அர்ஜுன் சிங் ககோடியா ஜபல்பூர் - நாக்பூர் நெடுஞ்சாலையின் தொண்டர்களுடன் மறியலில் ஈடுபட்டுள்ளார். சியோனி மாவட்ட எஸ்.பி, காவல்துறையினருடன் விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

சியோனி மாவட்டக் கூடுதல் எஸ்.பி எஸ்.கே.மராவி செய்தியாளர்களிடம், `பழங்குடியினத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். சுமார் 15 முதல் 20 பேர் கொல்லப்பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று, அவர்கள் பசுவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டிய பிறகு தாக்கியுள்ளனர். தாக்கப்பட்டவர்களுள் இருவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பிரேதப் பரிசோதனை இனி நடத்தப்படும்’ எனக் கூறியுள்ளார்.   

மேலும் அவர், `இந்த விவகாரத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைக் காவல்துறை தேடி வருகிறது. குற்றம் செய்தவர்களாகச் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2 பேரைச் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளோம். கொலை செய்யப்பட்டவரின் வீட்டில் சுமார் 12 கிலோ கறி கைப்பற்றப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார். 

காயங்களுடன் உயிர் தப்பிய பிராஜேஷ் பட்டி சம்பவ இடத்திற்குத் தான் வந்தடைந்த போது, சம்பத் பட்டி, தன்சா ஆகிய இரு பழங்குடி ஆண்கள் மீது கும்பல் ஒன்று தடிகளால் தாக்கியதாகவும், தன்னையும் தாக்கியதாகவும் கூறியுள்ளார். 

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ அர்ஜுன் சிங் ககோடியா இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பஜ்ரங் தள் அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குச் சுமார் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படுவதுடன், அரசு வேலை வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல் நாத் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விவகாரத்தில் மாநில அரசு உயர்கட்ட விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் இந்த விவகாரத்தில் பஜ்ரங் தள் அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர் இந்தியாவிலேயே பழங்குடி மக்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நிகழும் மாநிலங்களுள் ஒன்றாக மத்தியப் பிரதேசம் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola