தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. தெலுங்கின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பபை பெற்றுள்ளது.




பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 17-ந் தேதி வெளியாக உள்ளது. கொரோனா மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமான புஷ்பா படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. பட வௌியீட்டிற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் படப்பிடிப்பை  முடிப்பதிலும், இறுதிக்கட்ட பணிகளிலும் படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன், இயக்குனர் சுகுமார் உள்பட ஒட்டுமொத்த படக்குழுவும் தினசரி 20 மணி நேரம் கடினமாக உழைக்கின்றனர். இதனால், அல்லு அர்ஜூன், படத்தின் இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் கடந்த ஒரு மாத காலமாக சரியாக தூங்காமல் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.


பட வெளியீட்டிற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால் படப்பிடிப்பு ஒருபுறமும், டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் மறுபுறமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கும் புஷ்பா திரைப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களது கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் படக்குழுவால் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் பெரிதும் வரவேற்பை பெற்றது.




முதலில் புஷ்பா திரைப்படம் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 25-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே தேதியில் ரன்வீர்சிங் நடிப்பில் உருவாகியுள்ள 83 திரைப்படமும் வெளியாக உள்ளதால் புஷ்பா படத்தை டிசம்பர் 17-ந் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


செம்மரக்கட்டையை கடத்தும் லாரி ஓட்டுநராக புஷ்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கிறார். பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், தனஞ்செய், சுனில், ஹரிஷ் உத்தமன், கிஷோர், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீதேஜ் ஆகியோர் நடிக்கின்றனர். சமந்தா குத்துபாடல் ஒன்றிற்கு நடனம் ஆடுகிறார்.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண