இயக்குநர் கரு.பழனியப்பன் விலகியதால் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகாமல் இருந்து வந்த ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சி மீண்டும் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழா தமிழா நிகழ்ச்சி 


இயக்குநர்கள் பார்த்திபன், எழில் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்து ஸ்ரீகாந்த், சினேகா நடித்த பார்த்திபன் கனவு படத்தின் மூலம் இயக்குநரானவர் கரு.பழனியப்பன். தொடர்ந்து சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திர புன்னகை, சதுரங்கம், ஜன்னல் ஓரம் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். அதேசமயம் துணை, கள்ளன், நதி, டி பிளாக், யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் அறிமுகமானார். 


இப்படியான நிலையில் சின்னத்திரையில் களம் கண்டார் கரு.பழனியப்பன். ஜீ தமிழில் ஒளிபரப்பான ”தமிழா தமிழா” நிகழ்ச்சியின் தொகுப்பாளராக  2018 ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார். விவாத மேடையாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே சமூக நீதி , சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது என்ற பதிவோடு கடந்த மார்ச் மாதம் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு.பழனியப்பன் விலகினார். 


இதன் பின்னர் கரு.பழனியப்பன் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘வா தமிழா வா’ நிகழ்ச்சி மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைதோறும் நண்பகம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது வருகிறது. 




மீண்டும் தமிழா .. தமிழா


இதனிடையே கரு.பழனியப்பன் விலகியதால் கடந்த 2 மாதங்களாகவே தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமல் நிறுத்தப்பட்டது. மீண்டும் அந்நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டுமென ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் விரைவில் தமிழா தமிழா நிகழ்ச்சி புதிய தொகுப்பாளருடன் ஒளிபரப்பாகவுள்ளது. பிரபல தனியார் ஊடகத்தில் பிரபலங்களுடன் சிறப்பான நேர்காணல் நடத்தி தனக்கென ஒரு ஆடியன்ஸை கொண்டுள்ள ‘ஆவுடையப்பன்’ தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.