நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார எபிசோடில் பெண் ஒருவர் தன் மணமுறிவு வாழ்க்கை பற்றி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.


காலம் கடந்தாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு இருக்கும் மவுசு  குறையாமல் இருக்கிறது. அதற்கு முக்கிய உதாரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “நீயா..நானா” நிகழ்ச்சி தான். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 12.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகிறது. கோபிநாத் இந்த நிகழ்ச்சியை  பல ஆண்டுகளாகவே தொகுத்து வழங்கி வருகிறார். இதில் பகிரப்படும் கருத்துகள் அனைத்து சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தும். இந்த வாரம் மணமுறிவு செய்த பெண்கள் vs பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. 


அந்த நிகழ்ச்சியில், ‘நான் விவகாரத்து பெற்றால் இந்த சப்போர்ட் கிடைக்கும்ன்னு நினைச்சேன். ஆனால் கிடைக்கல’ என்ற ரீதியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் பேசிய ஒரு பெண், ‘என்னோட குடும்பம் தான் விவாகரத்து பெற சொல்லி அழுத்தம் கொடுத்தார்கள். என் கணவருக்கு விவரமும் தெரியல, வேலையும் இல்ல. நாங்க பார்த்துக்கிறோம். நம்ம வீடு இருக்கு. நானே ஒரு வீடு தர்றேன்னு எனக்கு அழுத்தம் கொடுத்து தான் நான் அந்த முடிவை எடுத்தேன். ஒருபக்கம் என் கணவரோடு வாழ ஆசை இருந்தது. ஆனால் என் குடும்பம் பண்ண சப்போர்ட்டில் அந்த முடிவுக்கு வந்துட்டேன். 



அதன்பிறகு என் அண்ணன் மற்றும் தம்பிக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது. அவங்க என்னை வெளியே போக சொல்லல. ஆனால் நானே வெளியே போக வேண்டிய நிலைமைக்கு வர வச்சிட்டாங்க. இன்னைக்கு எனக்கு எந்த சப்போர்ட்டும் கிடையாது. என்னோட தூக்கம் 6 மணி நேரம் தான். காலையில ஷூ கம்பெனில வேலை பார்த்தேன். சாயங்காலம் வந்து தையல் தைக்கிறேன். இயல்பான வாழ்க்கை வாழ முடியல. அன்னைக்கு வீட்டுல இருக்கவங்களால நான் எடுத்த முடிவு என்னை கடினமாக உழைக்க வச்சிருக்கு. அந்த முடிவு எடுத்ததை நான் தவறு என நினைக்கிறேன். நேர்மையாக என் கணவரிடம் மன்னிப்பு கேட்கிறேன். அவருக்கு ஒரு 6 மாதம் தான் வேலை இல்லை. எனக்கு திறமையும் இருந்துச்சு, வேலையும் இருந்துச்சு. கொஞ்சம் அனுசரித்து ஒத்துழைத்து இருந்தால் இப்ப நான் நினைச்ச மாதிரி வாழவில்லை என்றாலும் ஓரளவு வாழ்ந்திருப்பேன். 


ஒரு 10 வருசம் கழிச்சி என் கணவரை தேடி போனேன். ஆனால் அவருக்கு வேறொரு கல்யாணம் ஆகியிருந்தது. எல்லாரும் ஓடுவோம், பேசுவோம், சிரிப்போம். ஆனால் தினமும் இரவு அந்த கடினமான உணர்வு வரும். நான் இப்ப பண்ணுற அந்த கடின உழைப்பை அவருடன் இருந்து பண்ணியிருந்தால் பெட்டராக இருந்திருக்குமே என நினைக்கிறேன்.