விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பொன்னி சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகி இணையவாசிகளிடையே கடும் கிண்டலான கமெண்டுகளைப் பெற்று வருகிறது. 


சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு காலம் கடந்தாலும்  மவுசு என்றும் குறையாமல் தான் உள்ளது. ஏனென்றால் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை மீண்டும் வேறு நிகழ்ச்சிகள் இல்லாத நேரத்தில் ஒளிபரப்பினால் கூட டிவி முன் உட்கார்ந்து பார்ப்பவர்கள் ஏராளம். இதில் சீரியல்கள் தனி ரகம். முந்தைய ஆண்டுகளில் ஒளிபரப்பான சீரியல்களில் சோகங்களை கொட்டி நம்மை உணர்வு ரீதியாக அழ வைப்பதை கண்டிருக்கலாம். ஆனால் தொழில்நுட்பங்கள் மாறிவிட்டது, சமூக வலைத்தளங்களின் பயன்பாடு பெருகி விட்டது. 


சீரியஸாக சீன் எடுத்தால் கூட காமெடி பண்ணாதப்பா என சொல்லும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்படுகிறது. அதேசமயம் இதே மாதிரி பேசுபொருளாக மாறினால் சீரியலுக்கு பப்ளிசிட்டி கிடைக்குமே என்று கிண்டல் செய்ய வேண்டுமென்றே காட்சிகள் வைப்பது, திரைப்படங்களை மிஞ்சும் வகையில் ரொமான்ஸ் மற்றும் சண்டை காட்சிகள், பாடல்கள் என சீரியலா இல்லை வேறு எதுவுமா என கேட்கும் அளவுக்கு இன்றைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. 



அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பற்றி சொல்லவே வேண்டாம். அதில் ஒன்று தான் ‘பொன்னி’ சீரியல். பெங்காலி  தொலைக்காட்சி தொடரான காட்சோராவின் ரீமேக் தான் இந்த சீரியல் என்பது நம் அனைவரும் அறிந்த விஷயம். அப்பா - மகள் உறவை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் வைஷூ சுந்தர், சபரி நாதன், வருண் உதய், கார்த்திக் சசிதரன், ஸ்ரீதேவி அசோக், யுவன்ராஜ் நேத்ரன், ஷமிதா, பார்கவி ஈஸ்வரமூர்த்தி மற்றும் தர்ஷிகா என பலரும் நடித்து வருகின்றனர். 


இந்த சீரியல் திங்கள் முதல் சனி வரை மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் நல்ல இடத்தைப் பெற்றுள்ள பொன்னி சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சக்தி அடிபட்டு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கட்டுகளுடன் வருகிறார். கொஞ்ச நாளைக்கு அவர் பெட் ரெஸ்ட்ல தான்  இருக்கணும். கூட இருந்து யாராவது பார்த்துக்கணும் என டாக்டர் சொல்கிறார். அடுத்த காட்சி சக்தியின் சட்டை மாற்ற பொன்னி முயல, அவர் கூச்சப்படுகிறார். உடனே பொன்னி கண்ணை துண்டால் கட்டிக்கொண்டு உதவி செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 


இதனைப் பார்த்த இணையவாசிகள், “பிரியமானவளே படமா?.. இந்த சீனை இன்னும் எத்தனை சீரியலில் வைப்பிங்க?..” என சகட்டு மேனிக்கு கமெண்டுகளை அள்ளி வீசியுள்ளனர்.