அமெரிக்க தொலைக்காட்சி தொடர் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் தொடர்களில் ஒன்று பிரண்ட்ஸ். காலம் கடந்தும் ரசிகர்களின் ஃபேவரைட் சீரிஸ்களில் ஒன்றாக கருதப்படும் பிரண்ட்ஸில் சாண்ட்லர் என்ற கதாபாத்திரத்தில் வந்து அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியவர் மேத்யூ பெர்ரி.
சாண்ட்லராக கலக்கிய மேத்யூ பெர்ரி மரணம்:
இவர் உயிரிழந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு வயது 54. மேத்யூ பெர்ரி, தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் பேச்சு மூச்சின்றி, அவர் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் ஆனால், அது எதுவுமே பலன் அளிக்கவல்லை என்றும் கூறப்படுகிறது. இது கொலையாக இருக்காது என சொல்லப்படுகிறது.
அமெரிக்கா மட்டும் இன்றி ஐரோப்பா, ஆசிய நாடுகள் என கண்டம் கடந்து ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள பிரண்ட்ஸ் சீரிஸில், சக கதாபாத்திரங்களை கலாய்த்தும் இயல்பான நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்தவர் மேத்யூ பெர்ரி. என்.பி.சி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம் தயாரித்து வெளியிட்ட பிரண்ட்ஸ் சீரிஸ், இன்றளவும் புகழ்பெற்று விளங்க அதில் வரும் கதாபாத்திரங்கள் முக்கிய பங்காற்றின.
இரவில் தூங்க முடியாமல் தவித்து வந்ததற்கு காரணம் என்ன?
கடந்த 1994ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை, தொலைக்காட்சியில் பத்து சீசன்களாக வெளியான பிரண்ட்ஸில் கலக்கிய மேத்யூ பெர்ரி, 'Fools Rush In', 'The Whole Nine Yards' ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பல ஆண்டுகளாக, அதீத மது போதை பழக்கம் காரணமாக மேத்யூ பெர்ரிக்கு உடல் நல பிரச்னைகள் இருந்து வந்துள்ளது.
இதனால், மது பழக்கத்தில் இருந்து விடுபட பல முறை மறுவாழ்வு மையத்துக்கு சென்று வந்துள்ளார் மேத்யூ பெர்ரி. சமீபத்தில் வெளியான பிரண்ட்ஸ் ரீயூனியன் நிகழ்ச்சியில், தனக்கு உடல் நல பிரச்னைகள் இருந்ததாகவும் படப்பிடிப்பின்போது கவலை காரணமாக இரவில் தூங்க முடியாமல் தவித்ததாகவும் மேத்யூ பெர்ரி கூறியிருந்தார். இது, சக நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
பிரண்ட்ஸ் தொடரில் ஜோயி ட்ரிபியானி கதாபாத்திரத்துடன் சாண்ட்லர் கதாபாத்திரம் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை வயிரு குலுங்க சிரிக்க வைத்தது. குறிப்பாக, இருவரும் சேர்ந்து கோழி குஞ்சு மற்றும் வாத்தை வளர்ப்பது, சாண்ட்லரின் உடைகளை ஜோயி அணிவது, புகை பழக்கத்தை விட சாண்ட்லர் மேற்கொள்ளும் முயற்சிகள், தோழியாக உள்ள மோனிகா கதாபாத்திரத்துடன் லண்டனில் செய்யும் சம்பவங்கள், அதை சக நண்பர்கள் கண்டுபிடிப்பது என சொல்லி கொண்டே போகலாம்.