விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கிழக்கு வாசல் சீரியல் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கிழக்கு வாசல் சீரியல்


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி இருக்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாரதி கண்ணம்மா 2 சீரியல் முடிந்தது அடுத்ததாக அந்த நேரத்தில் எண்ட்ரீ கொடுத்தது “கிழக்கு வாசல்” சீரியல். நடிகை ராதிகா சரத்குமார் சன் டிவியில் விஜய் டிவிக்கு வந்து தனது ராடன்  மீடியா ஒர்க்ஸ் மூலம் இந்த சீரியலை தயாரித்தார். கிழக்கு வாசல் சீரியலில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் முதன்மை வேடத்தில் நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியானது முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.






முதலில் இந்த கேரக்டரில் மறைந்த இயக்குநர் மாரிமுத்து அணுகப்பட்ட நிலையில் அவர் மறுத்து விட்டார். மேலும் கிழக்கு வாசல் சீரியலில் ரேஷ்மா முரளிதரன், வெங்கட் ரங்கநாதன், ரோஜா ஸ்ரீ, அஸ்வினி ராதாகிருஷ்ணா, ஆனந்த பாபு, ஷியாம், பிரவீன் என ஏகப்பட்ட பேர் நடித்தனர். முதலில் இந்த சீரியல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான நிலையில் பின்னர் மாலை 4 மணிக்கு மாற்றப்பட்டது. அதன்பின் மதிய நேரத்துக்கு மாற்றப்பட்டது. 


விரைவில் எண்ட் கார்டு


விறுவிறுப்பாகவும், எதிர்பாராத திருப்பமாகவும் சென்று கொண்டிருந்த கிழக்கு வாசல் சீரியலில் கடந்த சில வாரங்களாக ஹீரோயின் ரேஷ்மா முரளிதரன் இல்லாமல் காட்சிகள் ஒளிபரப்பாக தொடங்கியது. இதனை சரிசெய்ய வெங்கட் ரங்கநாதன் இரட்டை வேடமாக காட்டப்பட்டு, பல புதிய கேரக்டர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர். அதேசமயம் ஒவ்வொரு வார டிஆர்பி ரேட்டிங்கிலும் கிழக்கு வாசல் சீரியல் பெரிய அளவில் சாதனை செய்யவில்லை. இதனால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர ராடன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  


இன்னும் ஒரு வாரத்தில் கிழக்கு வாசல் சீரியல் முடிவுக்கு வரவுள்ளது.கிளைமேக்ஸ் காட்சி பாசிட்டிவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ சன் டிவியில் பல சூப்பர்ஹிட் சீரியல்களை தயாரித்த ராடன் நிறுவனத்தின் ஒரு சீரியல் ஆரம்பித்த ஒரு வருடத்திற்கு உள்ளாகவே முடிவுக்கு வரவுள்ளது சின்னத்திரை வட்டாரத்திலும் பேசுபொருளாக உள்ளது.