விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' தொடரில் கடந்த இரண்டு வாரமாக தாத்தா ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக ஒளிபரப்பானது. மிகவும் பரபரப்பாக சந்தோஷமாக நகர்ந்து வந்து கதைக்களத்தில் திடீரென ஒரு ட்விஸ்ட் வைத்து பிறந்தநாளை கொண்டாடிய அடுத்த நாளே ராமமூர்த்தி தாத்தா இறந்து போனது போல கதைக்களத்தை மாற்றியுள்ளனர். இது சின்னத்திரை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்ததுடன் காண்போரை கண்கலங்க வைத்து வருகிறது. 



இந்த சீரியல் துவங்கிய நாள் முதல் கணவன் கோபி மற்றும் மாமியார் ஈஸ்வரியின் ஆதரவு இல்லாமல் இருந்த பாக்கியாவுக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருந்த கதாபாத்திரம் தான் பாக்யலட்சுமியின் மாமனார் கதாபாத்திரமான ராமமூர்த்தி கேரக்டரில் நடித்த ரோசரி. இந்த சீரியலில் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்ததால் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார்.


அவரின் இறுதி சடங்குகள் கொண்ட கதைக்களம் இந்த வாரத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இது ஒரு கற்பனையான சீரியல் தான் என்றாலும் அந்த கேரக்டராகவே பார்க்கப்பட்ட ராமமூர்த்தியின் மரணம் ரசிகர்களை அதிக அளவில் பாதித்துள்ளது. 




அப்படி இந்த ராமமூர்த்தி கேரக்டரை முடிவுக்கு கொண்டு வர என்ன காரணம் என்பது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரோசரி கூறுகையில் "முதலில் எனக்கே இது பற்றி சொல்லும் போது அதிர்ச்சியாக இருந்தது. இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என குழப்பமாக இருந்ததுடன் ஒரு பாசிட்டிவ் கேரக்டரை முடிவுக்கு கொண்டு வந்ததை நினைத்து வருத்தமாகவும் இருந்தது. சடங்குகள் அனைத்தும் தத்ரூபமாக நடைபெறும் என கூறிய போது முதலில் தயங்கினாலும் பிறகு ராமமூர்த்தி கேரக்டருக்கு தானே செய்யப்படுகிறது என்பதால் சரி என சொல்லிவிட்டேன். ரோசரி நலமாக இருக்கிறேன்" என தெரிவித்து இருந்தார்.


மேலும் அவர் கூறுகையில் பாக்கியலட்சுமி தொடர் இறுதி கட்டத்தை நெருங்குவதாகவும் கதைப்படி ராமமூர்த்தி கதாபாத்திரம் இறந்து விடுவதாகவும் தான் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார். 


இந்த வாரம் முழுக்க ராமமூர்த்தியின் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் பாக்கியா தான் அனைத்து சடங்குகளையும் செய்ய வேண்டும் என ஈஸ்வரி கூற பாக்கியா கனத்த இதயத்துடன் அனைத்து சடங்குகளையும் செய்ய உள்ளார். இந்த வாரம் பாக்கியாலட்சுமி சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங்கில் ஏராளமான மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.