சின்னத்திரை நடிகர்கள் பலரும் அபாரமான திறமை கொண்டவர்களாக இருந்து வருகிறார்கள். அதில் ஒருவர் தான் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ள நடிகர் ஸ்ரீ. பிரபலமான இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷின் மகனான இவர் சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையில் நடித்துள்ளார். 2001ம் ஆண்டு ஒளிபரப்பான கீதாஞ்சலி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து ஆனந்தம், கண்மணி, சிவசக்தி, இதயம், கனா காணும் காலங்கள், யாரடி நீ மோகினி உள்ளிட்ட ஏராளமான பாப்புலர் சீரியல்களில் நடித்துள்ளார். பம்பரக்கண்ணாலே, ரங்கூன், சரோஜா தேவி, ஆர்.கே. நகர் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 


 




தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான ப்ரைம் டைம் சீரியலான 'வானத்தை போல' சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். அண்ணன் தங்கை பாசத்தை சுற்றிலும் நகரும் இந்த கதைக்களத்தில் பாசக்கார அண்ணனாக நடித்து வருகிறார். இந்த சீரியல் டிஆர்பி வரிசையிலும் முன்னணி இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.  


 


உயிரை கொடுத்து மிகவும் எதார்த்தமாக நடிக்கும் நடிகர்களில் ஒருவரான நடிகர் ஸ்ரீ, வானத்தை போல சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நடிகர் ஸ்ரீயை மிதித்துவிட்டு போவது போல ஒரு காட்சி படமாக்கப்படுகிறது. அதில் ஒரு இடத்தில் ஸ்ரீ முகத்தை ஒருவர் காலால் மிதிப்பது போல ஒரு காட்சி இருக்கும். முகத்தில் கால் வைத்து மிதிக்க அந்த நபர் கூச்சப்படுவதால், ஸ்ரீ அந்த நபரை அழைத்து எப்படி மிதிக்க வேண்டும் என கற்றுக்கொடுக்கிறார். "தயவு செய்து நான் என்ன சொல்றேனா நாம எல்லாருமே காசு வாங்கி இருக்கோம். கொஞ்சமாவது நடிக்கணும். நியாயமா இருக்கணும்" என சொல்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். 


 






 


ஸ்ரீ போன்ற பல திறமையான நடிகர்களை சினிமா ஏன் பயன்படுத்த தவறியது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இப்போதெல்லாம் துணை நடிகர்கள் ஹீரோக்களை விட அதிகமாக பேசி விட கூடாது என்பதற்காக தமிழ் பேச முடியாதவர்களை நடிக்க வைக்கிறார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.