TV Serial TRP Ratings: பெரிய திரை சினிமாக்களை விட சின்னத்திரை தொடர்கள் தற்போது குடும்பங்களில், குறிப்பாக, இல்லத்தரசிகளின் அபிமானங்களைப் பெற்று, அனைவரையும் கவர்வதில் முன்னிலையில் இருக்கின்றன. அந்த வகையில் தமிழ் டிவி தொடர்களின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்துவரும் சன் டிவியின் முதலிடத்தை இந்த வாரம் விஜய் டிவி, நீண்ட காலத்திற்குப் பிறகு தட்டிப் பறித்துள்ளது.
கோலோச்சும் சன் டிவி:
அண்மைக் கால வரலாற்றில் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில், சன் டிவியின் தொடர்கள்தான், அதுவும் ஈவ்னிங் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எப்போதுமே டிஆர்பி (TRP- Television Rating Points) ரேட்டிங் எனும் தொலைக்காட்சித் தர வரிசை புள்ளிகளில் முன்னிலையில் இருக்கும். வாரந்தோறும் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளின் ரேட்டிங் புள்ளிகள் வியாழக்கிழமைகளில் வெளியாகும். விஜய் டிவி, ஜீ டிவி, கலர்ஸ் போன்றவை அவ்வப்போது சன் டிவிக்கு போட்டி தந்தாலும், டாப் 10 தொடர்களில் ஒரு சில இடங்களைப் பெறுமே தவிர, முதல் இடத்தை, அண்மைக்கால வரலாற்றில் பெற்றது இல்லை.
முன் எப்போதோ சில முறை, விஜய் டிவி வந்தது போல் ஞாபகம் என்பதுதான் டிவி நிலையங்களின் கருத்தே. அந்த அளவுக்கு சன் டிவியின் தொடர்கள்தான் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில், நம்பர் ஒன்னாக எப்போதும் இருக்கும். இந்தச் சூழலில்தான் தற்போது சன் டிவி, நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த வாரத்தில் முதல் இடத்தை விஜய் டிவி-யிடம் இழந்திருக்கிறது. ஆனால், டாப் 10-ல் சன் டிவியின் ஆதிக்கம்தான், இந்த வாரமும் அதிகம் இருக்கிறது.
தமிழ் டிவிகளின் கடந்த வார டாப் 10 தொடர்கள் பட்டியல்:
1. இந்த வார டிஆர்பி எனும் தரவரிசைப் படி, 8.38 புள்ளிகளுடன், விஜய் டிவியில் பல திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை முதலிடத்தைப் பெற்று உள்ளது. கடந்த சில வாரங்களாகவே, டாப் 5 இடங்களில் ஒன்றாக வந்துக் கொண்டிருந்த சிறகடிக்க ஆசை தொடர், இந்த வாரம், முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
2. தொடர்ந்து டாப் 3 இடங்களுக்குள் இருந்த வந்த சன் டிவியின் சிங்கப்பெண்ணே தொடர் 8.27 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.
3. நீண்ட காலமாக ஓடிக் கொண்டிருக்கும் சன் டிவியின் கயல் தொடர், 8.08 புள்ளிகளுடன் 3-ம் இடத்தைப் பெற்றுள்ளது.
4. சன் டிவியில் அண்மையில் தொடங்கிய, இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் மருமகள் தொடர், 7.89 புள்ளிகளுடன் 4-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
5. நீண்டகாலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும், அண்ணன் - தங்கை பாசத்தைச்சொல்லும் சன் டிவியின் வானத்தைப் போல தொடர், 7.50 புள்ளிகளுடன் 5-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
6. விஜய் டிவியின் ஹிட் தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி, 7.12 புள்ளிகளுடன் இந்த வாரம் 6-ம் இடத்தைப்பிடித்துள்ளது.
7. ஏழாவது இடத்தில், சன் டிவியில் அண்மையில் ஒளிபரப்பைப் தொடங்கிய, இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மல்லி தொடர், 6.80 புள்ளிகளுடன் 7-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
8. விஜய் டிவியில் நீண்ட காலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ், 6.77 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் உள்ளது.
9. இரண்டாம் பாகம் கதையுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சன் டிவியின் சுந்தரி, 6.49 புள்ளிகளுடன் 9-ம் இடத்தில் உள்ளது.
10. டாப் 10-ன் கடைசி இடமான பத்தாம் இடத்தில், விஜய் டிவியின் சின்ன மருமகள் தொடர், 5.72 புள்ளிகளுடன் உள்ளது.
தேர்தல் ரிசல்டை மிஞ்சும் டிவி தொடர்கள்!
தேர்தலின் போது வரும் முடிவுகள் கூட எப்போதாவதுதான் வரும். ஆனால், டிவி தொடர்கள் குறித்த முடிவுகள், வாரந்தோறும் வந்து, டிவி தொடர்களின் நிலையினையும் அதற்கான விளம்பர வருவாயினையும் தீர்மானிக்கின்றன. அந்த வகையில், பல மாதங்கள் சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர் நம்பர் ஒன்னாக இருந்தது. டாப் 10-ல் மற்ற இடங்களில் அவ்வப்போது மாற்றங்கள் இருந்தாலும், பொதுவாகவே, சன் டிவியின் தொடர்கள்தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வாரம், விஜய் டிவி-யின் சிறகடித்த ஆசை, டிவி தொடர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த வாரம் எப்படி இருக்கும் என்பதை அடுத்த வியாழக்கிழமை இரவு தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழ்த் தொலைக்காட்சிகளில் டாப் 10 தொடர்களில் சன் டிவியின் ஆதிக்கமே அதிகம் இருக்கும். விஜய் டிவியும் தொடர்ந்து போட்டிப் போட்டு வருகிறது. இந்த டிவியின், 3 முதல் 4 தொடர்கள், டாப் 10-க்குள் எப்படியாவது வந்து விடும் அதேபோல், சில முறை ஜீ டிவியின் தொடர்களும் டாப் 10-ல் இடம்பெறுவது உண்டு. ஆனால், ஆதிக்கத்துடன் முடிசூடா மன்னனாக டிவி தொடர்களில் இருப்பது சன் டிவி என்பதே இல்லத்தரசிகளின் முடிவாக, டிஆர்பி தரவரிசையின் மூலம் தெரிகிறது. டிவி தொடர்களைப் போல், அடுத்த வாரம் தரவரிசை வெளியாகும்போது, என்ன திருப்பம் வரப்போகிறது என்பதற்கு நாமும் காத்திருப்போம்.