எத்தனை தொலைக்காட்சி சேனல்களின் வருகை இருந்தாலும் முன்னோடியாக இருக்கும் சன் டிவியை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. அந்த அளவிற்கு சின்னத்திரை ரசிகர்களை முழுமையாக ஆக்கிரமித்து விட்ட தொலைக்காட்சி சேனல் என்றே சொல்ல வேண்டும்.
பிக் அப்பாகும் எதிர்நீச்சல்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் காலம் காலமாக முன்னிலை இடத்தை பிடித்து வருகிறது. டிஆர்பி ரேட்டிங் வரிசையில் தொடர்ந்து முதல் இடத்திலிருந்து வருகிறது சன் டிவி சீரியல்கள். அந்த வகையில் பல மாதங்களாக டிஆர்பி வரிசையில் முதல் இடத்தில் இருந்து வந்த 'எதிர்நீச்சல்' சீரியல் கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. நடிகர் மாரிமுத்துவின் இறப்பு தான் அதற்கு காரணமாக ரசிகர்கள் கருதுகிறார்கள். அதனால் கதைக்களத்தில் தொய்வு ஏற்பட்டதால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டியது. ஆனால் மீண்டும் முழுவீச்சில் முன்னணி இடத்தை நோக்கி பயணித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக மீண்டும் பரபரப்பான கதைக்களத்துடன் முன்னேறி வருகிறது எதிர்நீச்சல் தொடர்.
அதே சமயத்தில் டிஆர்பி ரேட்டிங் குறைவாக இருக்கும் சீரியல்களை முடிவுக்கு கொண்டு வருவதும் அதற்கு பதிலாக புதிய சீரியல்களின் வருகையும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் குறைவான டிஆர்பி ரேட்டிங் கொண்ட சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
செவ்வந்தி :
திவ்யா ஸ்ரீதர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'செவ்வந்தி' தொடர் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருந்து இந்த சீரியல் நேர மாற்றத்துடன் காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. அதனால் பெரிய அளவில் அடி வாங்கிய 'செவ்வந்தி' சீரியலின் டிஆர்பி ரேட்டிங் மிகவும் குறைவாக இருப்பதால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டுவர சேனல் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Mr. மனைவி :
நடிகை ஷபானா, பவன் ரவீந்திரா, அம்மு ராமச்சந்தர், லதா உட்டோரின் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'Mr. மனைவி'. கிராமத்து பெண்ணை சுற்றிலும் நகரும் கதைக்களத்துடன் சமீபத்தில் தொடங்கிய 'சிங்கப்பெண்ணே' என்ற சீரியலின் வருகையால் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'Mr. மனைவி'
தொடர் இரவு 10.00 மணிக்கு மாற்றப்பட்டது. அதனால் இந்த சீரியலும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியாமல் போனது. இதன் டிஆர்பி ரேட்டிங்கும் குறைவாக உள்ளதால் விரைவில் 'Mr. மனைவி' சீரியலும் முடிவுக்கு வரவுள்ளது.
அன்பே வா :
ஏற்கனவே இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'அன்பே வா' இரவு 10.30 மணிக்கு மாற்றப்பட்ட பிறகு முற்றிலுமாக தொய்வு அடைய துவங்கியது. ஏற்கனவே அன்பே வா சீரியலின் கதைக்களம் கொஞ்சம் இழுவையாக இருந்ததோடு டிஆர்பி ரேட்டிங்கும் குறைவாக இருந்ததால் இந்த சீரியலுக்கும் எண்டு கார்டு போட முடிவெடுத்துள்ளனர்.
எனவே ஒரே நேரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று தொடர்கள் முடிவுக்கு வருவதால் அந்த நேரங்களில் புதிய சீரியல்களின் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.