தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெள்ளித்திரையில் வரும் திரைப்படங்களுக்கு நிகராக மிகவும் சின்னத்திரையில் வரும் சீரியல்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. குறிப்பாக, தமிழ்நாட்டில் சீரியல் என்றாலே அது சன் தொலைக்காட்சி சீரியல் என்றே குறிப்பிடலாம். 


சீரியல்கள்:


தமிழ் சின்னத்திரை வரலாற்றில் எவர்கிரீன் ப்ளாக்பஸ்டர் ஹிட் சீரியல்களான சித்தி, கோலங்கள், மெட்டி ஒலி, நாதஸ்வரம், திருமதி செல்வம் போன்ற பல பிரபலமான சீரியல்கள் சன் தொலைக்காட்சியிலே ஒளிபரப்பானவை. இன்று ஜீ தமிழ், விஜய் தொலைக்காட்சியிலும் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. 


ப்ரைம் டைம் என அழைக்கப்படும் மாலை முதல் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் கயல், மூன்று முடிச்சு போன்ற சீரியல்கள் சன் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு பெரியளவு வரவேற்பு இல்லாமல் உள்ளது. 


டிஆர்பி:


கடந்த 2022ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் சீரியல் செவ்வந்தி. இந்த சீரியல் சுமார் 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. 1000 எபிசோடுகளை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரியளவு வரவேற்பு இல்லாமல் உள்ளது என்றே கூற வேண்டும். இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் வெறும் 1.51 புள்ளிகள் மட்டுமே பெற்று சன் தொலைக்காட்சி சீரியல்களின் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 


பூங்கொடி சீரியல் 1.70 புள்ளிகள் பெற்று கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. புனிதா சீரியல் 2.01 என்ற டிஆர்பி புள்ளிகள் பெற்றுள்ளது. மணமகள் வா சீரியலுக்கு 2.50 புள்ளிகளும், புன்னகை பூவே 3.22 புள்ளிகள் பெற்று கடைசி 5 இடத்தில் உள்ளது. 


திரைக்கதையில் விறுவிறுப்பு கூடுமா?


இந்த சீரியல்களின் திரைக்கதையில் உள்ள தொய்வு மற்றும் ஒளிபரப்பப்படும் நேரம் காரணமாக இந்த சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் உள்ளதாக கருதப்படுகிறது. இதனால், திரைக்கதையில் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக இந்த சீரியல்களை நகர்த்த மேலே கூறிய சீரியல்களின் இயக்குனர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது, 


மேலும், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சீரியல்களும் சன் தொலைக்காட்சிக்கு சவால் அளிப்பதால் இந்த சீரியல்களில் விரைவில் டிஆர்பி ரேட்டிங்கை ஏற வைக்க சீரியல் தயாரிப்பு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளனர்.