சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ரியாலிட்டி ஷோகளுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அதே போல சீரியல்களுக்கும் அமோகமான வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் வீட்டின் வரவேற்பறைக்கே நேரடியாக செல்லும் சீரியல்களில் வரும் கருத்துக்கள் நேரடியாக பார்வையாளர்களை எளிதில் சென்றடைகிறது. பலரின் இல்லங்களில் மனிதர்களால் செய்ய முடியாத மாற்றத்தையும் சீரியல்களால் சாதித்து  காட்ட முடிகிறது. அப்படி ஒரு அருமையான கருத்தை காட்சிப்படுத்தியதற்காக அனைவரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது சன் டிவியின் நியூ என்ட்ரியான 'இனியா' தொடர். 


 



விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி'  முதல் மற்றும் இரண்டாம் சீசனில் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தவர் ஆலியா மானசா. இரண்டாவது சீசனில் நடித்து வந்தவர் பிரசவத்திற்காக அந்த சீரியலில் இருந்து விலகினார். பிரசவத்திற்கு பிறகு ஒரு பிரேக் எடுத்து கொண்ட ஆலியா மானசா மீண்டும் சன் டிவியின் இனியா தொடர் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 


 






 


இனியா தொடரில் சமீபத்தில் வெளியான ஒரு எபிசோடின் காட்சி ரசிகர்கள் மட்டுமின்றி நெட்டிசன்கள் பாராட்டையும் குவித்து ஒட்டுமொத்தமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. நடிகை பிரவீனா கோயிலுக்காக எடுத்து சென்ற தேங்காயை எப்படி மறுபடியும் வீட்டுக்கு உடைக்காமல் எடுத்து செல்வது என்ற குழப்பத்தில் இருக்க அப்போது அவர் எதிரில் நின்று கொண்டு இருந்த ஒரு ஆட்டோவில் பெரியாரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அப்போது பிரவீனா அந்த தேங்காயை அருகில் இருந்த கல்லில் உடைத்து பெரியாரை வணங்குகிறார். அப்போது அவர் பெரியாரின் புகைப்படத்தை பார்த்து "ஐயா பெரியவரே! பெரியாரே! உங்கள பத்தி புத்தகத்துல படிக்கல ஆனால் காத்துவாக்குல கேள்விப்பட்டு இருக்கேன். நீங்க பொம்பளைங்கள அடிமையா நடத்துறத பத்தி அப்பவே பேசியிருக்கீங்களாமே. ஒரு ஆம்பளையா இப்படி பேசுறதுக்கு பெரிய மனசு வேணும். அதனால தான் உங்கள பெரியாருனு கூப்பிடுறாங்க போல. நீங்க எழுதின புத்தகத்தை படிச்சு இருந்தா நான் இப்படி அடிமையா இருந்து இருக்க மாட்டேன். போனது போகட்டும். இனிமேலாவது உங்களோட புத்தகத்தை எல்லாம் படிக்கப் போறேன். பொம்பளைங்க அடுப்பை விட்டு வெளியே வந்து சுதந்தரத்தை அனுபவிக்கனும்" என பிரவீனா பேசிய டயலாக் பாராட்டுகளை குவித்து வருகிறது. 


பெரியாரை பத்தி எத்தனையோ விஷயங்களை நாம் கேள்விப்பட்டு  இருப்போம் ஆனால் இதை சீரியல் வாயிலாக பார்ப்பது இதுவே முதல் முறை என்பதால் முற்போக்காளர்களின் வரவேற்பைப் குவித்து வருகிறது இனியா தொடர்.