சின்னத்திரை ரசிகர்களுக்காக சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 சீரியல்களின் நேரம் மாற்றப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


என்னதான் பெரிய திரை பிரபலங்கென்று தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், விவாத நிகழ்ச்சிகளுக்கு என்று சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகர்கள் உள்ளனர். இதனால் டிஆர்பியை தக்க வைக்க சுவாரஸ்யமாகவும், அதே சமயம் விறுவிறுப்பாகவும் நிகழ்ச்சியை கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட படக்குழுவினர் மெனக்கெடுகின்றனர். 


இப்படியான நிலையில் முன்பெல்லாம் சின்னத்திரையில் சீரியல்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை நடுவில் சில மணி நேரங்கள் தவிர்த்து ஒளிபரப்பாகி வந்தது. காலப்போக்கில் இது காலை 9 மணி முதல் தொடங்கி இரவு 11 மணி வரை சனிக்கிழமைகளிலும் ஒளிபரப்பாக தொடங்கியது. ஆனாலும் சீரியலுக்கு என்று இருக்கும் மவுசு என்றும் குறைவதில்லை. இதனால் முன்னொரு காலத்தில் மிகவும் பிரபலமாக ஓடிய சீரியல்கள் எல்லாம் தற்போது மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 






இதனை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் பொருட்டு வாரத்தின் 7 நாட்களும் சீரியல் என்ற புதிய நடைமுறை கையில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை சன் டிவி ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் தொடங்கி வைத்தது. கடந்த 2 மாதங்களாக அந்த சீரியல் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் அந்த எதிர்நீச்சல் சீரியல் நம்பர் 1 ஆக இருப்பதே காரணம் என சொல்லப்பட்டது. 


இப்படியான நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 சீரியல்கள் இனி ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர். மனைவி. இனி இந்த சீரியல் ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்தின் 7 நாட்களும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும். இந்த சீரியலில் ஷபானா ஷாஜகான், பவன் ரவீந்திரன், ஆலம் , மான்சி ஜோஷி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். புதுமணத் தம்பதிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சவால்கள் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பிரச்சினையே இந்த சீரியலின் அடிப்படை கதையாகும். 


மற்றொரு சீரியல் அன்பே வா. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்தின் 7 நாட்களும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.டெல்னா டேவிஸ், விராட், பூஜா ஃபியா, நான்சி தீபக் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.கிட்டதட்ட 3 ஆம் ஆண்டை நெருங்கி வரும் இந்த சீரியல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் இந்த 2 சீரியல்களும் ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதோடு நேரம் மாற்றப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. 




மேலும் படிக்க: December Movies: ’சினிமா ரசிகர்களுக்கு காத்திருக்கும் வேட்டை’ .. டிசம்பரில் களமிறங்கும் 3 ஹீரோக்கள் படங்கள்..!