தமிழ் சினிமாவில் டிசம்பர் மாதம் ரிலீசாகவுள்ள 3 படங்கள் பற்றிய பேச்சுக்கள் ரசிகர்களிடையே எழத் தொடங்கியுள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம். 


2023 ஆம் ஆண்டு கிட்டதட்ட முடிவுக்கு வரவுள்ள நிலையில் தமிழ் சினிமாவின் முதல் பாதி பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றது. ஆனால் இரண்டாம் பாதியில் தமிழ் சினிமா மிகப்பெரிய பிரபலங்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஜூன் முதல் செப்டம்பர் வரை ஜெயிலர், மாவீரன், மாமன்னன், போர்தொழில் என பல நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி கல்லா கட்டின. 


இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் அடுத்ததாக லியோ, ஜப்பான், கேப்டன் மில்லர், துருவ நட்சத்திரம்  உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளது. அதேசமயம் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களும் தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு நல்ல வசூலைப் பெற்றுள்ளது. இப்படியான நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக டிசம்பரில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாகி இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை படைக்கப்படாத சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கேப்டன் மில்லர்


ராக்கி, சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர் படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள கேப்டன் மில்லர் படம் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் டீசர் கடந்த ஜூலை 28 ஆம் தேதி தனுஷ் பிறந்தநாளன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. 


சலார்


கேஜிஎஃப் முதல் மற்றும் 2 ஆம் பாகம் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் பிரபாஸ்,  ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு  உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள சலார் படத்தை ஹம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட இப்படம் ஒத்திவைக்கப்பட்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


டங்கி 


3 இடியட்ஸ், பி.கே உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்திருக்கும் திரைப்படம் ‘டங்கி'. இந்த படத்தில் விக்கி கெளஷல்,டாப்ஸி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தையும் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தனது ரெட் சில்லீ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். ஜவான் திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஷாருக்கான் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வருகின்ற டிசம்பர் 22 ஆம் தேதி  டங்கி திரைப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்.ஏற்கனவே நடப்பாண்டில் ஷாருக் நடித்த பதான், ஜவான் படங்கள் ரூ.1,000 கோடி வசூலைப் பெற்ற நிலையில் டங்கி படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என ரசிகர்கல் தெரிவித்துள்ளனர்.




மேலும் படிக்க: Asian Games 2023 : ஆசிய விளையாட்டு போட்டி: குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்..!