சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (நவம்பர் 2) எபிசோடில் ஜான்சி ராணி ரூமுக்கு வந்து "ஏண்டி ஈஸ்வரி ஏதோ பிள்ளையை தூக்கிட்டு வந்தியே யார் அது?" என கேட்க அனைவரும் அப்படி யாரும் வரலையே என சொல்லி சமாளிக்க தாரா "நான் தான் அது. என்னை தான் பெரியம்மா தூக்கிட்டு வந்தாங்க" என சொல்ல ஜான்சி ராணி நம்பாமல் சென்று விசாலாட்சி அம்மாவிடம் போட்டு கொடுத்து அவர்களையும் அழைத்து வருகிறாள்.
மாடிக்கு வந்த விசாலாட்சி அம்மா "அங்கே சமையலை அப்படியே போட்டுட்டு இங்க வந்து என்ன பண்றீங்க? ஆமா ஏதோ பிள்ளையை தூக்கிட்டு வந்தீங்களாமே யார் அது?" என கேட்க "அப்பத்தா நான்தான் அது. இந்த அம்மா பார்க்காம வந்து உங்ககிட்ட சொல்லுது. அதுக்கு போய் சப்போர்ட் பண்றீங்களே" என எப்படியோ சமாளித்து அனுப்பி விடுகிறாள் தாரா.
"நீங்க இங்க இருந்தீங்கன்னா உங்களை தேடிக்கிட்டு யாராவது ஒருத்தர் வந்துகிட்டே தான் இருப்பாங்க. நீங்க எல்லாரும் கீழ போங்க... நாங்க பாத்துக்குறோம்" என சொல்லி தாரா அனைவரையும் அனுப்பி வைக்கிறாள். தர்ஷினி, தர்ஷன், ஐஸ்வர்யா மூவரும் வெண்பாவை பார்த்து கொள்கிறேன் என சொல்கிறார்கள்.
சிறிது நேரத்திற்கு பிறகு தர்ஷினி, ஐஸ்வர்யா மற்றும் தர்ஷன் கீழே இறங்கி வர ஈஸ்வரி பதற்றமாகிறாள். "வெண்பாவை என் தனியாக விட்டுட்டு வந்தீங்க" என கேட்கிறாள். "வெண்பா தூங்கிகிட்டு இருக்கா. தாரா அவ கூட இருக்கா. அது தான் வெண்பாவுக்கு சாப்பாடு எடுத்துட்டு போலாம் என வந்தோம்" என தர்ஷினி சொல்ல அங்கே ஜான்சி ராணி வந்து நிற்கிறாள். "ஏண்டி ஐஸு, உனக்கு சீக்குனு எல்லாரும் உன்னோட உட்கார்ந்துகிட்டு இருந்தாங்க. இப்ப சரியா போச்சா" என ஜான்சி ஐஸ்வர்யாவை கேட்கிறாள்.
ரேணுகாவும் நந்தினியும் அவர்களை அங்கிருந்து கிளப்புவதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஜான்சியையும் "சாப்பாடு ரெடி ஆனதும் நானே வந்து கூப்பிடுறேன் நீ போ மா" என சொல்லி அனுப்பி வைக்கிறாள் ஈஸ்வரி.
நந்தினி சென்று அனைவரையும் சாப்பிட அழைக்கிறாள். ஞானம் மற்றும் இருந்தால் அவரை சாப்பிட வர சொல்லிவிட்டு கதிரும் குணசேகரனும் எங்கே இருக்கிறார்கள் என கேட்கிறாள். அவர்கள் தோட்டத்தில் இருப்பதாக சொன்னதால் அவர்களை தேடி தோட்டத்திற்கு செல்கிறாள். மிக தொலைவாக சென்றும் அவர்களை பார்க்க முடியவில்லை என புலம்பிக்கொண்டே போகிறாள்.
அங்கே கதிரும் குணசேகரனும் வளவனுடன் ஜீவானந்தத்தை போட்டுத்தள்ளுவதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "ஜீவானந்தத்தை பற்றி நீங்க குறைச்சு எடை போடாதீங்க" என வளவன் சொல்ல "உன்னால முடிஞ்சா நீ போட்டு தள்ளு இல்லைன்னா நானே அவனை போடுறேன்" என குணசேகரன் சொல்கிறார். "கிழவியையும் அந்த தாடிகாரனையும் போட்டு தள்ளாமல் நீ இங்க இருந்து கிளம்ப முடியாது" என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் மூவரும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த நந்தினி "யார் இது புதுசா ஒரு ஆள். இங்க நின்னு என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க" என யோசிக்கிறாள். பிறகு கதிரை அழைத்து சாப்பிட வரச்சொல்கிறாள். நந்தினியை பார்த்த மூவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.