சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வரவுள்ள நிலையில் கடைசி நாள் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. 

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சன் டிவியில் சீரியல் தவிர்த்து தான் பிற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்கிற அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. இப்படியான நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் “எதிர்நீச்சல்”. கோலங்கள் மூலம் சன் டிவியில் தனக்கென தனி அடையாளத்தை பதித்த திருச்செல்வம் இயக்கிய இந்த சீரியலில் மதுமிதா, சபரி பிரசாந்த், கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா இசை, ஜி. மாரிமுத்து, சத்தியப்பிரியா, கமலேஷ், கீர்த்தனா, சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன், பம்பாய் ஞானம் மற்றும் பாரதி கண்ணன் என ஏகப்பட்ட பேர் நடித்தனர். 

முழுக்க முழுக்க பெண் அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வர நினைக்கும் பெண்கள், அவர்களை அடிமையாகவே வைத்திருக்கும் ஆண்கள் என இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஆதி குணசேகரனாக வந்த மறைந்த இயக்குநர் மாரிமுத்துவின் கேரக்டர் அல்டிமேட் ஆக வயது வித்தியாசமில்லாமல் பலரும் சீரியலை பார்க்க காரணமாக அமைந்தது. அந்த கேரக்டர் இல்லையென்றால் சீரியலே இல்லை என்ற நிலையும் இருந்தது. டிஆர்பி ரேட்டில் பல முன்னணி சீரியல்களை பின்னுக்கு தள்ளியது. 

இப்படியான நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். இதனால் இந்த சீரியல் நிலை என்னவாகும் என பலரும் கவலைப்பட்டனர். அவரின் கேரக்டரில் நடிக்க நடிகர் வேல ராமமூர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டார். காமெடி கலந்த வில்லன் கேரக்டரில் மாரிமுத்து வந்த நிலையில் வேலராமமூர்த்தியிடம் முழுக்க முழுக்க வில்லத்தனம் மட்டுமே இருந்ததால் சீரியலின் நிலை வீழ்ச்சியடைய தொடங்கியது. இதனால் கதை எங்கெங்குலாமோ பயணித்து ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்ய தவறியது. 

இதனால் சீரியலை முடிவுக்கு கொண்டு வர குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஜூலை 8 ஆம் தேதியுடன் எதிர்நீச்சல் சீரியல் முடிவடைவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அதில் நடித்த பிரபலங்கள் அனைவரும் கடைசி நாள் ஷுட்டிங்கின் போது குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் போட்டோக்களை பதிவிட்டு நினைவுகளை, நெகிழ்ச்சியான தருணங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.