சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஒன்றான எதிர் நீச்சல் தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் ஸ்வாரஸ்யமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இரு தினங்களுக்கு முன்னர் தான் பல நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த ஆதிரை திருமணம் நடைபெற்று முடிந்தது ஆனால் எதிர்பார்த்தது போல அருணுடன் அல்லாமல் கரிகாலனுடன் என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 



நேற்றைய எபிசோடில் ஒரு வழியாக ஆதிரையை கரிகாலன் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டனர். அங்கே என்னால் இருக்க முடியாது அதனால் என்னையும் உங்களுடன் அழைத்து செல்லுங்கள் என ஆதிரை குணசேகரனிடம் கெஞ்சுகிறாள். கொஞ்சமும் மனம் இறங்காத  குணசேகரனும் கதிரும் ஆதிரையை கதற கதற ஜான்சி ராணி வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விடுகிறார்கள். ஆனால் மனம் தாங்காத ஞானம் தான் ஆதிரைக்காக குணசேகரனிடம் கேட்கிறான். ஆனால் அவனையும் அசிங்கப்படுத்தி விடுகிறார்கள். வேறு வழியில்லாமல் ஞானமும் சென்று விடுகிறான். 



ஜனனியும் சக்தியும் மருத்துவமனைக்கு சாருபாலாவை சந்திக்க செல்கிறார்கள். அங்கே அருண் அடிபட்டு அனுமதிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். சாருபாலா ஜனனியை பார்த்து என்னை ரோல் மாடல் என்ன சொல்லிவிட்டு இப்படி செய்து விட்டாய் என சொல்கிறார். நீங்கள் ஆரம்பித்து வைத்ததை நான் முடித்து விடலாம் என யோசித்தேன் ஆனால் அது இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை என்கிறாள் ஜனனி. எஸ்.கே.ஆரும் ஜனனியை  திட்ட சக்தி காதல் திருமணம் செய்து கொண்ட நீங்கள் இருவருமே இப்படி பேசினால் என்ன செய்வது என்கிறான். ஜனனி செய்த முறை வேண்டுமானாலும் தவறாக இருக்கலாம் ஆனால் அவளின் நோக்கம் உண்மையானது என்கிறான் சக்தி. அருணின் இந்த நிலைக்கு நானும் ஒரு காரணம் தான் என ஜனனி சொல்கிறாள்.


 



வீட்டிற்கு வந்த குணசேகரன் அனைவரையும் பார்த்து என்கிட்டயே உங்க வேலையை காட்டுறீங்களா. உங்களை என்ன செய்ய போகிறேன் என்பதை பொறுத்து இருந்து பாருங்கள் என மிரட்டுகிறார். விசாலாட்சி என்னுடைய மகள் வாழ்க்கையை இப்படி நாசமாக்கி விட்டீர்களே உங்களுக்கு மனசாட்சியே இல்லையா என கேட்கிறார். அந்த ஜான்சி  ராணி வீட்டில் எப்படி என் மகள் இருப்பாள் என புலம்புகிறார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவு வந்தது. 


 



அதனை தொடர்ந்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஈஸ்வரி குணசேகரனை பார்த்து எங்கள் வாழ்க்கையில் முடிவெடுக்கும் அதிகாரத்தை உங்களிடம் யார் கொடுத்தது என தைரியமாக கேட்கிறாள். அந்த நேரத்தில் சக்தியும் ஜனனியும் வீட்டுக்கு வருகிறார்கள். குணசேகரன் ஜனனியை பார்த்து தோல்வியை ஒத்துக்கொண்டு என்னிடம் மன்னிப்பு கேள் என்கிறார். அதற்கு ஜனனி மிகவும் தைரியமாக தோற்றது நானல்ல நீங்கள் தான் என்கிறாள். அவள் குணசேகரனை எதிர்த்து பேசியதை தாங்காத கதிர் எகிறிக்கொண்டு ஜனனியை நோக்கி போடி வெளியே என கையை ஓங்கி கொண்டு வருகிறான். அருகில் இருந்த சக்தி கதிரை ஒரு அறை அறைந்து என் மனைவி மீது எவன் கை வைத்தாலும் சரி அவ்வளவு தான் என்கிறான். சக்தியின் தைரியத்தை பார்த்து பூரித்து போகிறார்கள் வீட்டின் மற்ற மருமகள்கள். இது தான் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ. 


மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு ஒரு மணி நேர ஸ்பெஷலாக கரிகாலனுக்கு மாப்பிள்ளை விருந்து கலகலப்பான தொகுப்பாக ஒளிபரப்பாக உள்ளது என்ற ப்ரோமோவையும் வெளியிட்டுள்ளது சன் டிவி. இந்த வாரம் ஞாயிறு மதியம் ஒரு எதிர்நீச்சல் டீம் ஒரு ஸ்பெஷல் விருந்து வைக்கப் போவது உறுதி.