சன் டிவியில் ஒளிபரப்பாகி வருவதில், டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் பிரபலமான தொடர், இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர். பல வாரங்களாக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த அருண் -ஆதிரைச்செல்வி திருமணம் கடைசியில் நடைபெறாமல் போனது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அருணிடம் ஒருமுறையாவது பேசிவிட வேண்டுமென துடிக்கும் ஆதிரையை, அருணின் அண்ணன் எஸ்.கே.ஆர் கண்டபடி திட்டிவிட்டு ஃபோனை வைத்துவிடுகிறார். அருண் தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கும் ஆதிரை, விரக்தியில் ரெஜிஸ்டர் திருமண உறுதிக்கான கையெழுத்து போட்டுவிடுகிறாள். எப்படியோ கரிகாலன் - ஆதிரை திருமணத்தை முடித்து விட்ட கர்வத்தில் இருக்கிறார் குணசேகரன். அப்போது ஜனனியை ஃபோனில் அழைக்கும் சாருபாலா, உடனே மருத்துவமனைக்கு ஜனனியை வருமாறு அழைக்க, அருண் பெரும் விபத்தில் சிக்கியது ஜனனிக்கும், சக்திக்கும் தெரிய வருகிறது. இதற்கு பிறகு என்ன காத்திருக்கிறது என்பது இனி வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.


அருணை திருமணம் செய்துகொள்வதற்காக கிளம்பிச்சென்ற ஆதிரையை குணசேகரனும், குணசேகரன் கூட்டமும் அடித்து இழுத்து வந்து ஊருக்கு நடுவில் வைத்து கட்டாயமாக தாலி கட்டவைக்கும் காட்டுமிராண்டித்தனமான சீனை பார்த்து நமக்கே பதற்றம் வந்ததுதானே?


அந்த கொடூரமான காட்சியை நடிக்கும்போது தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை, ஆதிரை கேரக்டரில் நடித்த சத்யா தேவராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவு இதோ..


"இந்த குறிப்பிட்ட தாலி கட்டும் காட்சியை நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். இன்னும் அதன் தாக்கம் எனக்கு இருக்கிறது. அதிலிருந்து மீள நீண்ட நேரம் ஆனது. ஆனால் இந்த மாதிரியான வன்முறைகளை சந்தித்த பெண்களை நினைத்து எனக்கு மனம் வருந்துகிறது. இப்படியான கட்டாயத் திருமணங்களையும், ஆண்களின் அழுத்தங்களையும் சந்தித்த பெண்களுக்காக என் மனம் இரங்குகிறது” என போஸ்ட் செய்திருக்கிறார்.


 






பெண்கள், சுதந்திரமான நிதி பாதுகாப்புடனும், தனக்கென படிப்பையும், வேலையையும் முடிவு செய்து அதில் பயணிப்பதும், சாதிப்பதும் எவ்வளவு முக்கியமானது என ஒவ்வொரு எபிசோடிலும் பேசுகிறது எதிர்நீச்சல். கருவைக் கலைக்கும் மாமியாரையும், கல்லைத் தூக்கிப்போடும் மருமகளையுமே காட்டிவந்த தமிழ் சீரியல்களுக்கு நடுவில், பெண்களுக்கு பெண்கள் பலமாக நிற்பார்கள் என்னும் தேவையான மாற்றத்தைப் பேசுகிறது எதிர்நீச்சல். எதிர்நீச்சல் தொடரில் வரும் பெண் கதாபாத்திரங்களை மிக நுணுக்கமாகவும், நுண் உணர்வுகளுடனும் வடித்திருக்கிறார்கள், இயக்குநர் திருச்செல்வமும், வசனகர்த்தா ஸ்ரீவித்யாவும்.