'சிறகடிக்க ஆசை' (Siragadikka Aasai) சீரியல் இன்றைய எபிசோடில் பாட்டியின் வருகையால் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். முத்து மீனாவுக்காக வாங்கி வந்த மோதிரத்தை போட்டு விட சொல்கிறார் பாட்டி. விஜயாவையும் அண்ணாமலையும் ஆசீர்வாதம் செய்ய சொல்லி மீனாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க சொல்கிறார் பாட்டி. வேண்டா வெறுப்பாக விஜயாவும் செய்கிறார்.
பாட்டி முத்துவையும் மீனாவையும் ஆசீர்வாதம் செய்யும் போது அடுத்த ஆண்டு குழந்தையுடன் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என சொல்கிறார். அதை கேட்ட விஜயாவின் முகம் மாறிவிடுகிறது. "மனோஜ் ரோகிணி முதலில் குழந்தை பெற்றுக்கொண்டாலும் எனக்கு சந்தோஷம் தான். நான் மூன்று பேரன்களையும் ஒன்று போல தான் பார்க்கிறேன் உன்னை போல இல்லை" என நாசுக்காக சொல்கிறார். "அதே போல யார் முதலில் எனக்கு கொள்ளு பேர குழந்தையை பெற்று கொடுக்கிறார்களோ அவர்களுக்கு என்னுடைய நிலத்தை எழுதி வைப்பேன்" என சொல்கிறார் பாட்டி.
மீனாவும் முத்துவும் மீனாவின் அம்மா வீட்டுக்கு வருகிறார்கள். வீட்டில் குடி இருக்கும் மற்றவர்கள் இருவரையும் பார்த்து வாழ்த்தி அனுப்புகிறார்கள். மீனாவின் அம்மாவும் தங்கையும் சந்தோஷமா வரவேற்கிறார்கள். முத்துவுக்கும் மீனாவுக்கும் துணி வாங்கி தர வேண்டும் என சத்யா தான் ஆசைப்பட்டார் என சொல்கிறார். அந்த நேரத்தில் சத்யா அங்கே வருகிறான் "இவன் வாங்கி கொடுத்த சட்டை தேவையில்லை" என கழட்டிப்போட "ஏன் நான் வாங்கிக்கொடுத்த சட்டையை போட்டுக்கிட்டா இவரோட கவுரவம் குறைஞ்சு போயிடுமா?" என சொல்ல முத்து கோவமாக வீட்டை விட்டு கிளம்புகிறான். அனைவரும் எவ்வளவு சமாதானம் செய்தும் கேட்காமல் மீனாவையும் அழைத்து கொண்டு கோபமாக அங்கிருந்து கிளம்பிவிடுகிறான் முத்து. மீனாவின் அம்மாவுக்கு மிகவும் வருத்தமாக போகிறது.
மீனா "முத்துவிடம் ஏன் இப்படி செய்தீர்கள்? என்னுடைய தம்பி வாங்கி கொடுத்தா என்ன? இப்படியா செய்வீங்க. எங்க அம்மா மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும்?" என கேட்க " உங்க அம்மா வாங்கி கொடுத்தா அவங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வாங்கி கொடுத்த பணம். அவனோட காசுல வாங்குனது எனக்கு தேவையில்லை" என சொல்கிறான். "அதுக்காக இப்படி சட்டையில்லாமலா வீட்டுக்கு வருவீங்க. உங்க அம்மா இதை பார்த்தா என்னை குத்தி குத்தி பேசி அசிங்கப்படுத்துவங்க" என சொன்னதும் முத்து ஷோரூம் ஒன்றுக்கு சென்று சட்டை வாங்கி போட்டு கொள்கிறான்.
கடையின் உரிமையாளர் முத்து கடை மீது நம்பிக்கை வைத்து பனியனோடு வந்து இருக்கிறார் என சொல்லி முத்துவுடன் போட்டோ ஒன்று எடுத்து கொண்டு அதை கடையில் பிரேம் போட்டு மாட்டப்போவதாக சொல்கிறார். அதை பார்த்ததும் மீனாவின் கோபம் தணிகிறது.
வீட்டுக்கு வந்த இருவரையும் பார்த்து விஜயா, ரோகிணி மற்றும் மனோஜ் ஷாக்காகிறார்கள். "போகும் போது வேற சட்டை போட்டுக்கிட்டு போனான். இப்போ வேற சட்டை போட்டுக்கிட்டு வந்து இருக்கான். அங்க ஏதாவது பிரச்சினை நடந்து இருக்குமோ ?" என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
மீனா வீட்டுக்கு உடனே வந்ததை பார்த்து பாட்டியும் அண்ணாமலையும் என்ன நடந்தது என விசாரிக்கிறார்கள். அப்போது முத்து வேற ஒரு சட்டையுடன் வந்திருப்பதை பார்த்து விசாரிக்க மீனாவுக்கு முத்துவும் வெவ்வேறு காரணத்தை சொல்கிறர்கள். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) கதைக்களம்.