சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினரோடு பார்த்து வருகிறாராம். இதனை பேட்டி ஒன்றில் அந்த சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் தெரிவித்துள்ளார். 


2003 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒளிபரப்பான தமிழ் சீரியல்களில் கோலங்கள் தொடரை யாராலும் மறக்க முடியாது. திருச்செல்வம் இயக்கிய இத்தொடரில் நடிகை தேவயானி கதையின் நாயகியாக நடித்திருந்தார். மெட்டி ஒலி இயக்குநரிடம் பணியாற்றிய திருச்செல்வம் இத்தொடரில் தொல்காப்பியன் என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். குறிப்பாக பெண்கள் மத்தியில் இச்சீரியல் பெரும் வரவேற்பை பெற்றது. 


இதனிடையே நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இயக்குனர் திருச்செல்வம் 'எதிர்நீச்சல்' என்ற தொடரை அதே கான்செப்ட்டை மையமாக வைத்து இயக்கி வருகிறார். அதாவது இந்த சீரியல் ஆணாதிக்கத்துக்கு எதிராகவும், அந்த மனோபாவத்தால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பெண்களையும் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. சுவாரஸ்யமான காட்சிகளால் எதிர்நீச்சல் சீரியல் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது.


 










இந்த சீரியலில் மதுமிதா, கனிகா, சபரி பிரஷாந்த், ஹரிப்ரியா இசை, வைஷ்ணவி நாயக், மோனிஷா விஜய், மெர்வெண், பிரியதர்ஷினி நீலகண்டன், சத்யா தேவராஜன், பாரதி கண்ணன் அப்பல்லோ ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இந்த சீரியலில் அப்பத்தா கேரக்டரில் வரும் பாம்பே ஞானம் கேரக்டர் பிரபலமாக மாறியது. காரணம் சீரியல் தொடங்கியது முதல் பேசாமல் இருந்து வந்த அவர் பேசிய பேச்சுகள் இணையத்தில் வைரலானது. 


5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பாகும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட சீரியல் பற்றி புதிய தகவல் ஒன்றை அச்சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் வெளியிட்டுள்ளார். அதாவது ஜெயிலர் படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த தனது நண்பரிடம் எதிர்நீச்சல் பற்றி பேசியுள்ளார். தனக்கு மிகவும் பிடித்த சீரியல் என்றும், குடும்பத்தில் அனைவரும் அதனை பார்த்து வருவதாகவும் தெரிவித்ததாக திருச்செல்வம் கூறியுள்ளார். இந்த தகவலால் அந்த சீரியல் குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.