பிரபல இயக்குநர் திருமுருகன், மீண்டும் சன் டிவியில் சீரியல் ஒன்றை இயக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


திருமுருகனா..யார் அது என யோசிப்பவர்களுக்கு ‘மெட்டி ஒலி’ கோபி என்றால் அவர் சட்டென நினைவுக்கு வருவார். டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா மகேஸ்வரி, ரேவதி பிரியா, போஸ் வெங்கட், ராஜ்காந்த், சேத்தன், சஞ்சீவ் என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே கொண்டு ”மெட்டி ஒலி” என்ற சீரியலை திருமுருகன் இயக்கியிருந்தார். சன் டிவியில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி வரை, ஒளிபரப்பான இந்த சீரியல் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றாகும். 






கொரோனா ஊரடங்கால் வீட்டில் தவித்த மக்களை மகிழ்விக்கும் வகையில் இந்த சீரியல் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பிக்கே சவால் விட்டது.  அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலை இயக்கிய திருமுருகன் அதில் கோபி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த சீரியலின் வெற்றியால் வெள்ளித்திரைக்கு சென்றார் திருமுருகன். 


பரத், கோபிகா, நாசர், சரண்யா, வடிவேலு நடித்த “எம் மகன்” படத்தை இயக்கி வெற்றி பெற்றார். தொடர்ந்து மீண்டும் பரத்தை வைத்து  ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தை எடுத்த நிலையில் அப்படம் பெரிய அளவில் ஓடாததால் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார். இதனையடுத்து நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாண வீடு என தொடர்ந்து சீரியல்களை இயக்கி வந்த நிலையில் இடையில் சிறிய பிரேக் எடுத்திருந்தார். 






இந்நிலையில் மீண்டும் சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியல் ஒன்றை திருமுருகன் இயக்கவுள்ளதாக வெளியாகியுள்ளது. இதுவும் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே இருக்கும் என்பதால் 90ஸ் கிட்ஸ்களும் இந்த சீரியலை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.