Serial actress Krithika : உருவ கேலியால் வீட்டில் முடங்கினேன்... மகனுக்காக மீண்டு வந்தேன்... கிருத்திகாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்
Serial actress Krithika : 83 கிலோ உடல் எடை அதிகரித்ததால் வீட்டிலேயே முடங்கி இருந்த சீரியல் நடிகை கிருத்திகா தன்னுடைய மகனுக்காக மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சின்னத்திரை நடிகர்கள் சமீப காலமாக வெள்ளித்திரை செலிப்ரிட்டிகளுக்கு நிகரான ஒரு வரவேற்பை பெற்று வருகிறார்கள். சோஷியல் மீடியாவில் கலக்கும் சின்னத்திரை நடிகர்களை ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். ஹீரோயின் கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் மட்டுமின்றி வில்லிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு உள்ளது. அப்படி மிகவும் பிரபலமான வில்லியாக ஏராளமான சீரியல்களில் பார்த்து ரசித்த ஒரு நடிகை தான் கிருத்திகா.
நடனத்தின் மீது ஆர்வம்:
சன் டிவியில் ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' சீரியல் மூலம் பிரபலமானவர். நடனம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.

கசந்த திருமண வாழ்க்கை :
திருமணமான கிரித்திகாவுக்கு குழந்தை பிறந்த பிறகு அவருடைய எடை கிட்டத்தட்ட 83 கிலோ வரை அதிகரித்தது. அதனால் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான கிருத்திகா மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். அதிக எடை காரணமாக மூன்று ஆண்டுகள் நடிக்காமல் இருந்து வந்தார். குடும்பம், குழந்தையை மட்டும் கவனித்து வந்த கிரித்திகாவுக்கும் அவரது கணவருக்கும் அந்த சமயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்துள்ளது. வீட்டுக்குள் நடந்த சண்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் அளவுக்கு முற்றியது. பின்னர் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.
உடல் எடை பிரச்சினை :
கிருத்திகா தன்னுடைய மகனை நினைத்து தான் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். நடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் சூழலில் அதிக எடையால் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமோ என தயக்கத்தில் இருந்த போது மெட்டி ஒலி சீரியலை தயாரித்த நிறுவனமே மீண்டும் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளது. இருப்பினும் எடை குறித்து சஞ்சலப்பட்ட கிருத்திகா அதை இயக்குநரிடம் சொல்ல அவரோ அந்த கதாபாத்திரத்துக்கு அதிக எடை இருந்தால் பொருத்தமாக தான் இருக்கும் அதனால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என சொல்லி சமாதானம் செய்துள்ளார்.
ஃபிட்னெஸ் பயிற்சி :
பலரும் கிருத்திகாவை யானை போல இருக்க, உனக்கெல்லாம் நடிப்பு தேவையா? என அசிங்கப்படுத்தியதால் கிருத்திகாவுக்கு உடல் எடை ஒரு நெருடலாக இருக்க மிகவும் கடினமாக ஃபிட்னெஸ் பயிற்சிகளை மேற்கொண்டு 83 கிலோ இருந்த எடையை இரண்டே ஆண்டுகளில் 60 கிலோவாக குறைத்துள்ளார். பல ஆண்டுகளாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பாண்டவர் இல்லம் ' சீரியலில் மூத்த மருமகளாக நடித்திருந்தார் நடிகை கிருத்திகா. பல சீரியல்களில் வில்லியாக நடித்துள்ள கிருத்திகா திரையில் வில்லத்தனத்தை காட்டுவதில் கெட்டிக்காரர்.
அண்ணனின் ஆதரவு :
மகன் வாழ்ந்த பிறகு அப்பாவை பற்றி கேட்டறிந்து மனது சங்கடப்படுவான் என நினைத்து கவலையில் இருந்த கிருத்திகாவுக்கு அவரது அண்ணன் பக்கபலமாக இருந்து மகனை தன்னுடைய பிள்ளையை போல வளர்த்து வருகிறாராம். அதனால் அண்ணனுக்கே தன்னுடைய மகனை தத்து கொடுத்துவிட்டாராம் கிருத்திகா. தன்னுடைய மகனுடன் சேர்ந்து சோஷியல் மீடியாவில் கிருத்திகா போஸ்ட் செய்து ரீல்ஸ் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.