பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த், தனது உடல்நிலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். 


1985 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய முதல் திரைப்படமான பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வேணு அரவிந்த்  கமல்ஹாசனின் அந்த ஒரு நிமிடம், சிவாஜி நடித்த படிக்காத பண்ணையார் ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து அலைபாயுதே, நரசிம்மா, வேகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், 1990 ஆம் ஆண்டு பொதிகையில் ஒளிபரப்பாகிய நிலாப்பெண் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.


இதனையடுத்து அலையோசை, ராசிமூலம், ராகுல்வம்சம், காதல் பகடை, காசளவு நேசம், அக்னி சக்தி, அலைகள், இந்திரன் சந்திரன், ஜனணி, வாழ்க்கை, செல்வி, வாணி ராணி ஆகிய தொடர்களில் நடித்தார். இதில் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி தொடரில் ராதிகாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். இதனிடையே கடந்தாண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமான வேணு அரவிந்திற்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதாகவும், மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதன் காரணத்தாலும் அவர் கோமா நிலைக்கு சென்றதாக கூறப்பட்டது.






இதனால் சின்னத்திரை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் அவருடன் அதே வாணி ராணி சீரியலில் நடித்த நடிகர் அருண் குமார் ராஜன் இந்த தகவலை மறுத்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் வேணு அரவிந்த் குறித்து பல தவறான செய்திகள் பரவி வருவதாகவும், அவர் கோமாவால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் நடிகர் வேணு அரவிந்த் தனது உடல் நிலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில் தலையில் சின்ன கட்டி இருந்ததாகவும், அது அகற்றப்பட்டு தற்போது நலமுடன் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இனிமேல் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டும் பார்க்க வேண்டும் என்றும் , நிறைய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாவத்தை சம்பாதித்ததால் தான் இப்படியெல்லாம் ஏற்பட்டுள்ளதோ என நினைப்பதாகவும் வேணு அரவிந்த் தெரிவித்துள்ளார்.