ஜீ தமிழ் நிகழ்ச்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ சரிகமப லிட்டில் சாம்ப்ஸ். இந்நிகழ்ச்சியின் 4ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளராக பங்கேற்றவர் திண்டிவனம் அம்மணம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தர்ஷினி. இவர் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிகழ்ச்சியின் போது தான் படிக்கும் பள்ளிகள் பற்றி சில விஷயங்களை தர்ஷினி பகிர்ந்து கொண்டார்.
அதில், "அம்மணம்பாக்கத்தில் தொடக்க பள்ளி வரையில் தான் இருக்கிறது. மேற்கொண்டு படிக்க வேண்டுமென்றால் அனந்தமங்கலம் பகுதியிலுள்ள பள்ளி தான் செல்ல வேண்டும். இதற்கு 5 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும். அதோடு பேருந்து வசதி கூட இல்லை. இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனி வரும் காலங்களில் இந்த அவல நிலை யாருக்கும் வர கூடாது. எங்களது ஊருக்கு பேருந்து வசதி வேண்டும் என்று கனத்த கூறியிருந்தார்".
இதையடுத்து தர்ஷினியின் தந்தையும் இந்த பிரச்சனை குறித்து பேசி இருந்தார். அதாவது நான் கோயில் திருவிழாக்களில் பம்பை அடிப்பவன். நான் பாடுவதை கேட்டு தான் தர்ஷினிக்கும் ஆர்வம் வந்தது. அதில், சாமி பாடல்கள் ரொம்பவே நல்லா பாடுவார். தர்ஷினி பாடுவதை அறிந்த பள்ளி ஆசிரியர், பள்ளிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வார். அப்படி தான் தர்ஷினிக்கு வாய்ப்பு கிடைத்தது.
அனந்தமங்கலத்தில் உள்ள பள்ளியில் தர்ஷினி படிக்கிறாள். அந்த பள்ளி அம்மணம்பாக்கத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. பேருந்து வசதி இல்லாததால் இங்கிருந்து 30 குழந்தைங்க பள்ளிக்கு நடந்து தான் போயிட்டு வர்றாங்க. இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. பைக் இருக்கும் வீட்டுல அவங்க பிள்ளைகள ஸ்கூல கொண்டு போயி விட்டுருவாங்க. இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும். தர்ஷினி ஸ்கூலுக்கு போனதால் தான் இன்று இந்த மேடையில் நிற்கிறார். ஊருக்கு மினி பஸ்ஸும் வருது. ஆனால், அந்த பஸ்ஸு ஸ்கூலுக்கு போகாது. ஏதாவது ஒரு அவசர நிலை என்றால் கூட எங்களால் எளிதில் எங்கும் செல்ல முடியாது. ஊருக்கு ஒரு பஸ் கொடுத்தா எங்க புள்ளைக ஸ்கூலுக்கு கால் வலிக்க நடந்து போக மாட்டாங்க என, அப்பாவித்தனமாக பேசினார்". இது அங்கு கூடி இருந்த பலர் கண்களை கலங்க செய்தது.