தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். 1981ம் ஆண்டு வெளியான 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தை பெற்றார். நடிகர் விஜயகாந்த், சிரஞ்சீவி, ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்த எஸ்.ஏ.சி தனது மகன் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் முன்னோடியாக இருந்தவர். தந்தையுடைய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் பெற்ற பிறகே மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.
எஸ்.ஏ.சி ஒரு இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட கலைஞராக திகழ்பவர். 2015ம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற படத்தைக் கடைசியாக இயக்கியிருந்தார். ஒரு நடிகராகவும் கவனம் பெற்ற எஸ்.ஏ.சி, டிராபிக் ராமசாமி, மாநாடு, கொடி மற்றும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் பல திறமைகள் கொண்ட ஒரு கலைஞனான எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது சின்னத்திரையிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் 'கிழக்கு வாசல்' என்ற தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எஸ்.ஏ.சி. ராதிகா சரத்குமார் தனது ராடான் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் வெங்கட் ரங்கநாதன், வேணு அரவிந்த், ரேஷ்மா முரளிதரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த புதிய தொடர் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
அந்த வகையில் எஸ்.ஏ.சி தனது 78வது பிறந்தநாளை ஜூலை 2ம் தேதி கொண்டாடினார். அவரின் இந்த பிறந்தநாளை கிழக்கு வாசல் சீரியல் டீமுடன் கொண்டாடினார், அந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.