விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆல் டைம் ஃபேவரட் தொடரான 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் மிகவும் பிரபலமான ரீல் ஜோடிகள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஜோடி. ரீல் ஜோடிகளாக கெமிஸ்ட்ரியில் பின்னிப் பெடலெடுத்த இந்த ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறினார். இருவரும் காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 



ஆர்.ஜே வாக தனது வசீகரமான குரல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த செந்தில் மிர்ச்சி செந்தில் என்று பிரபலமாக அறியப்பட்டவர். தவமாய் தவமிருந்து, பப்பாளி, வெண்ணிலா வீடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள செந்தில் சின்னத்திரையில் 'மதுரை' என்ற தொடர் மூலம் அறிமுகமானார். ஆனால் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்த சீரியல் சரவணன் மீனாட்சி. அதே போல கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜா ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். இருவரும் இணைந்து மாப்பிள்ளை என்ற சீரியலிலும், கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்பளை என்ற வெப் தொடரிலும் நடித்தனர். மூன்று சீசன்களாக ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.   


காதலித்து வந்த இருவரும் 2014ம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த எட்டு ஆண்டுகளாக குழந்தை இல்லை என்ற கவலையில் இருந்த செந்தில் - ஸ்ரீஜா தம்பதியினருக்கு மகிழ்ச்சியான காலம் கிடைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஸ்ரீஜாவின் வளைகாப்பு விழா நடைபெற்றது. அந்த நிகழ்வின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வாழ்த்துக்களை குவித்தது. கடந்த ஜனவரி மாதம் இந்த தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த சந்தோஷமான செய்தியை செந்தில் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் தெரிவிக்க அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.


 



அதனை தொடர்ந்து தற்போது செந்தில் - ஸ்ரீஜா தம்பதி தனது 9ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். மிகவும் எளிமையான முறையில் அவர்களின் இந்த கொண்டாட்டத்தின் சமயத்தில் தனது 6 மாத  குழந்தையுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை முதல் முறையாக சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். எங்களின் 9ம் ஆண்டு திருமண நாள் பரிசு எங்களின் மகன் என பதிவிட்டுள்ளார் செந்தில். ரசிகர்கள் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்து வருகிறார்கள். குழந்தை பார்ப்பதற்கு அப்படியே அம்மா ஸ்ரீஜா போலவே இருக்கிறான் என கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த போஸ்ட் லைக்ஸ்களை குவித்து வருகிறது.


தற்போது செந்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'அண்ணா' சீரியலில் நடித்து வருகிறார். அவருக்கு ஏராளமான திரைப்பட வாய்ப்புகளும் வருகிறது.