Pongal Movies in TV: பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் புதிய படங்கள் என்னவெல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பதை பற்றி காணலாம். 


சன் டிவி


லியோ


அனைவரும் எதிர்பார்த்தபடியே சன் டிவியில் பொங்கல் தினத்தன்று மாலை 6.30 மணிக்கு நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ படம் ஒளிபரப்பாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் நடித்தனர். அனிருத் இசையமைத்த இப்படம் 2023 ஆம் ஆண்டு அதிகம் வசூல் செய்த படங்களில் முதலிடம் பிடித்தது.


ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படம் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஜனவரி 16 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 


கலைஞர் டிவி 


இறைவன் 


வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஐ.அஹமது இயக்கிய படம் தான் ‘இறைவன்’. இந்த படத்தில் ஜெயம் ரவி நயன்தாரா, ராகுல் போஸ், நரேன், ஆசிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி, வினோத் கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த படம் கலைஞர் தொலைக்காட்சியில் ஜனவரி 16 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது 


கழுவேத்தி மூர்க்கன்


அறிமுக இயக்குநர் கௌதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயா தேவி , முனிஷ்காந்த் , சரத் லோஹிதாஸ்வா  உள்ளிட்ட பலரும் நடித்த படம் “கழுவேத்தி மூர்க்கன்”. இந்த படத்துக்கு டி. இமான் இசையமைத்திருந்தார். கடந்த மே 26 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. இந்த படம் கலைஞர் டிவியில் ஜனவரி 15 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது


விஜய் டிவி 


பரம்பொருள் 


அரவிந்த் ராஜ் இயக்கத்தில் அமிதேஷ், சரத் குமார், காஷ்மீரா பர்தேசி உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘பரம்பொருள்’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் விஜய் டிவியில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 


லக்கி மேன் 


பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு, வீரா, ரெபெக்கா, ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்ட பலரும் நடித்த படம் “லக்கி மேன்”. அதிர்ஷ்டத்தை தேடி அலையும் மனிதனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. 


இதனைத்தவிர விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பான படங்களும் திரையிடப்படுகிறது. ஜனவரி 15 ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு மாமன்னன் படமும், இரவு 9 மணிக்கு போர்தொழில் படமும் ஒளிபரப்பாகிறது. இதேபோல் ஜனவரி 16 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு பிச்சைக்காரன் 2 படமும், இரவு 9 மணிக்கு குட் நைட் படமும் ஒளிபரப்பாகிறது. 


ஜீ தமிழ் 


ஜவான் 


அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி,  பிரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலரும் நடித்த படம் “ஜவான்”. அனிருத் இசையமைத்த இப்படம் இந்தியில் எடுக்கப்பட்டு பின் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படம் வசூலில் ரூ.1000 கோடி பெற்று சாதனைப் படைத்தது. இந்த படம் பொங்கலுக்கு முதல் நாளான ஜனவரி 14 ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. 


மார்க் ஆண்டனி 


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்துவர்மா, சுனில் வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்‘மார்க் ஆண்டனி’. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்த இந்த படம் பொங்கல் அன்று ஜனவரி 15 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 


வீரன் 


ஹிப்ஹாப் தமிழன் ஆதி ஏஆர்கே சரவணன்  இயக்கத்தில்  நடித்த படம் ‘வீரன்’. இந்த படத்தில் ஆதிரா ராஜ், வினய் ராய், நக்கலைட்ஸ் சசி, முனீஷ் காந்த் என பலரும் நடித்தனர். இப்படம் ஜீ தமிழ் சேனலில் ஜனவரி 16 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.