சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலை புகழ்ந்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பேஸ்புக் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீங்களுமா தொலைக்காட்சி சீரியல் எல்லாம் பார்க்கிறீர்கள்?" என்று ஒரு நண்பர் கேட்டார். நீங்களுமா என்று அவர் கேட்டதும், தொலைக்காட்சித் தொடர் நாடகங்களைப் பார்ப்பதே தகுதிக் குறைவு என்று கருதுவதும் எனக்குப் புரிந்தது!
ஆம், நம் பொதுப் புத்தியில் அப்படி ஒரு கருத்து உறைந்து கிடக்கிறது! பொதுவாக, கூடுதல் வேலை இல்லாதவர்கள், பொழுது போகாதவர்கள், குறிப்பாக, வீட்டில் இருக்கிற பெண்கள்தாம் இந்தத் தொடர் நாடகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் என்ற கருத்து நம்மிடம் இருக்கிறது. இந்த எண்ணம் ஒரு விதத்தில், நம் சக நண்பர்களையும், நம் வீட்டுப் பெண்களையும் அவமதிக்கிற ஒன்று என்றே சொல்ல வேண்டும்.
எல்லா தொலைக்காட்சிகளிலுமாகச் சேர்த்து, ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 100 தொடர் நாடகங்கள் வரக்கூடும் என்று நினைக்கிறேன். அவற்றுள் பலவற்றையும் பார்த்து, நேரத்தை வீணாக்குவது சரியில்லைதான். அதற்காக, தொலைக்காட்சி நாடகங்களைப் பார்ப்பதே தவறு என்றோ, தகுதிக் குறைவு என்றோ கருதுவதும் சரியில்லை! அப்படிக் கருதுவது, ஒரு கலை வடிவத்தை நாம் இழிவு செய்வதாகவே ஆகும்!
கடந்த மூன்று மாதங்களாக நான் ஒரு நாடகத்தைத் தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்த்து வருகிறேன். மற்ற நாடகங்கள் எல்லாம் சரியில்லாதவை என்று அதற்குப் பொருள் இல்லை. இந்த நாடகம் எனக்குப் பிடித்திருக்கிறது என்பதும், இதற்கு மேல் பிற நாடகங்களைப் பார்ப்பதற்கு எனக்கு நேரம் கிடைப்பதில்லை என்பதும்தான் உண்மை!நான் தொடர்ந்து பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல், கூட்டங்களுக்குப் போய்விட்டு இரவு தாமதமாக வரும் போது மனைவியிடம் நடந்த கதையைக் கேட்டும் தெரிந்து கொள்கிற ஒரு நாடகம் உண்டு!
அந்த நாடகத்தின் பெயர் "எதிர்நீச்சல்"!
அந்த நாடகம் வீட்டினிலே பெண்களைப் பூட்டி வைக்கும் மடமையை எதிர்த்துக் கதை சொல்கிறது! பெண்கள் ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்னும் தெளிவைப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஆண்களை விட அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்து நிற்கும் பெண்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் என்னும் உண்மையை ஒவ்வொருவர் மூளையிலும் உறைக்கிற மாதிரிச் சொல்கிறது!
எனவே எனக்கு அந்த நாடகம் மிகவும் பிடித்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல், அந்தக் கதையைச் சொல்லும் அழகு, நாடகத்தின் விறுவிறுப்பு, உரையாடல்களின் கூர்மை, பட்டுத் தெறிக்கும் நகைச்சுவை என்று பல்வேறு செய்திகள் பார்க்கின்றவர்களை ஈர்கின்றன!. மறந்துவிடாமல் இன்னொன்றைச் சொல்ல வேண்டும். அந்த நாடகத்தில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பு, அத்தனை அருமையாக இருக்கிறது! அவர்களின் குரல்கள் மட்டும் இல்லாமல், முகம் பேசுகிறது, கண்கள் பேசுகின்றன, நடை உடை பாவனைகள் கூட நடிப்பை வெளிப்படுத்துகின்றன!
நாடகத்தின் இயக்குனர் திருச்செல்வம், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் அனைவரையும் நாம் பாராட்ட வேண்டும்!
சரி, இரவு 9.30 மணி ஆகப்போகிறது. நாடகம் தொடங்கிவிடும். நாம் பிறகு பேசுவோம்!!” என தெரிவித்துள்ளார்.