ஜோதிடர்கள் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குநரும்,நடிகருமான மாரிமுத்து மீது திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


எதிர்நீச்சல் ஆதிகுணசேகரன்


இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்து தமிழில் கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மாரிமுத்து. இவர் பரியேறும் பெருமாள், பைரவா. தீராக்காதல் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் மாரிமுத்து இன்றைக்கு தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் மிகப்பிரபலம். அதற்கு காரணம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல். இதில் ‘ஆதி குணசேகரன்’ என்ற கேரக்டரில் அவர் நடித்து வருகிறார். 


தமிழா தமிழா நிகழ்ச்சி 


இப்படியான நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் பிரபல விவாத நிகழ்ச்சியான “தமிழா தமிழா”வில் மாரிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். “ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் vs சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள்” என்ற தலைப்பில் அந்த எபிசோட் ஒளிபரப்பானது. 


இதில் பேசிய மாரிமுத்து, ‘இந்த உலகத்தில் அறிவியல் ரீதியிலான உண்மையும், புவியியல் ரீதியிலான உண்மைகளுமே மட்டுமே உண்மை. ஜோதிடம் பார்ப்பவர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகள். நாம் இந்தியா பின்தங்கி இருக்க காரணமே ஜோதிடர்கள். இந்த நாட்டை பின்னோக்கி இழுத்துட்டு போகிறவர்கள் ஜோதிடர்கள் தான்” என ஜோதிடத்தையும், ஜோதிடம் சொல்பவர்களையும் கடுமையாக விமர்சித்தார். 


அவரது பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பும், ஆதரவும் எழுந்தது. அந்நிகழ்ச்சியில் மாரிமுத்து பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. 


போலீசில் புகார் 


இந்நிலையில் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில், அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் இணைந்து மாரிமுத்து மீது புகார் அளித்துள்ளனர். அதில், தங்களை தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசிய மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் மகேந்திரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் ஜோதிடர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.