90ஸ் கிட்ஸ்களின் சந்தோஷமான வைப்ஸ் சமீப காலமாக மிகவும் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில் அந்தக் காலகட்டத்தில் ஒளிபரப்பான சீரியல்கள் கிளாசிக் பீல் கொடுத்து சமீப காலமாக மீண்டும் ட்ரெண்டாகி வருகின்றன. அப்படி, டியூஷன் முடிந்ததும் வேகவேகமாக வீட்டுக்கு விரைந்து வந்து டிவி முன் உட்கார்ந்து அம்மா, அக்கா ,பாட்டியுடன் சேர்ந்து ரசித்த எவர்கிரீன் மெகா தொடர்களில் ஒன்று இயக்குநர் திருமுருகனின் 'மெட்டிஒலி' தொடர்.


2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொடர் மூன்று ஆண்டுகளாக 2005ஆம் ஆண்டு வரை சின்னத்திரை ரசிகர்களை கைக்குள்ளே அடக்கி வைத்து இருந்தது. 811 எபிசோட்கள் வரை ஒளிபரப்பான இந்த மெட்டிஒலி தொடருக்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 'அம்மி அம்மி அம்மி மிதித்து' என்ற டைட்டில் பாடலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். எந்த வீட்டில் பார்த்தாலும் இந்த சத்தம் ஒலிக்கும். இன்று நினைக்கும் போதும் 90'ஸ் கிட்ஸ்களுக்கு பழைய நினைவுகள் உருண்டோடும். 


 



அப்பா கதாபாத்திரமாக நடிகர் டெல்லி குமார் நடிக்க, மனைவி இல்லாமல் ஐந்து பெண் குழந்தைகளை வளர்த்த தாயுமானவனாக சிறப்பாக நடித்திருந்தார். காவேரி, காயத்ரி, வனஜா, உமா மகேஸ்வரி மற்றும் ரேவதி பிரியா என ஐந்து மகள்களையும் எப்படி வளர்த்து கரையேற்றுகிறார் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பானது. குடும்ப பாங்கான இந்த சீரியல் ஏராளமான ரசிகர்களை பெற்று முதலிடத்தில் இருந்தது.


18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த சீரியலின் இரண்டாம் பாகமாக 'மெட்டிஒலி 2 ' தொடரை இயக்குநர் திருமுருகன் இயக்கப்பபோவதாக ஏற்கனவே இணையத்தில் தகவல்கள் வெளியானது. விரைவில் இந்தத் தொடர் அதே சன் டிவியில் ஒளிபரப்பாக போகிறது என்றும், இன்னும் இரண்டே வாரத்தில் இந்த சீரியலுக்கான ஷூட்டிங் தொடங்கும் என்றும் தகவல்கள் இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.


இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. கூடிய விரைவில் சின்னத்திரை ரசிகர்களுக்கு இந்த ஹேப்பி நியூஸ் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீரியலில் யார் யார் நடிப்பார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 


ஏற்கனவே திருச்செல்வம் இயக்கத்தில் மிகவும் பரபரப்பாக 'எதிர் நீச்சல்' தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் 'மெட்டிஒலி 2' சீரியலும் சேர்ந்தால் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.