விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று 'பாவம் கணேசன்'. நவீன் நாயகனாகவும் நேஹா நாயகியாகவும் நடித்த இந்த சீரியலில் அனிலா ஸ்ரீகுமார், விலாசினி, நேத்ரன் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த சீரியலில் கணேசனாக நடித்த நவீன் தங்கையாக பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஷிமோனா ஜேம்ஸ்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷிமோனா ஜேம்ஸ் சன் டிவியில் ஒளிபரப்பான 'நாயகி' தொடர் மூலம் அறிமுகமானார். ஆரம்பக் காலக்கட்டங்களில் ஆல்பங்களில் நடித்து வந்த ஷிமோனாவுக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாவம் கணேசன் தொடருக்கு பின்னர் ஷிமோனாவை வேறு எந்த சீரியலிலும் பார்க்க முடியவில்லை.
இந்த நிலையில் தான் ஷிமோனா தனது நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அவரின் திருமணமும் நடைபெற்றுள்ளது. தனது நீண்ட நாள் நண்பரான கிரண் நேதனல் என்பவரை ஷிமோனா காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற அவரது திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஷிமோனாவின் திருமணப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகின்றன. ரசிகர்கள் பலரும் இந்த புதுமண தம்பதியினருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து ஷிமோனா சீரியலில் நடிக்க வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.