விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் சீரியல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற ஒரு சீரியல் என்றால் அது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'.
அண்ணன் - தம்பி பாசம் :
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் கூட்டுக் குடும்பக்கதையை மையமாக வைத்து ஒளிபரப்பான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஒரு கூட்டுக் குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதரர்கள், அவர்களின் மனைவிகள் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வரும்போது ஏற்படும் சில நிகழ்வுகள், சந்திக்கும் சில பிரச்சினைகள், அதை எப்படி அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்ற கதைக்களத்தை வைத்து ஒளிபரப்பான இந்தத் தொடர், ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இறுதி நாள் கொண்டாட்டம் :
ஸ்டாலின் முத்து, சுஜிதா, வெங்கட் ரெங்கநாதன், ஹேமா சதீஷ், குமரன் தங்கராஜன், லாவண்யா, சரவணா விக்ரம், விஜே தீபிகா, ஷாந்தி வில்லியம்ஸ், ரோசரி, மீனா செல்லமுத்து உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இந்தத் தொடர், இறுதி அத்தியாயத்தை எட்டி உள்ளது. சீரியல் இறுதி நாள் ஷூட்டிங்கில் ஒட்டுமொத்த சீரியல் குழுவினரும் இணைந்து கேக் வெட்டி, கொண்டாடி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தனர்.
கடந்த சில மாதங்களாக சற்று இழுபறியாக நகர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை முடிவுக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர் சீரியல் குழுவினர். அந்தத் தகவல் இணையத்தில் அவ்வப்போது கசிந்தும் வந்தது. அந்த வகையில் சீரியல் குழுவினர் இறுதி நாள் எடுத்துக்கொண்ட புகைப்படம் சீரியல் முடிவை உறுதி செய்தது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாவது சீசன் விரைவில் வரும் என்றும் தகவல்கள் வெளியானது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 :
தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. அண்ணன் - தம்பிகள் இடையே நடைபெற்ற பாச போராட்டத்தை தொடர்ந்து அப்பாவுக்கும் மூன்று மகன்களுக்கும் இடையே நடக்கும் கதையை மையமாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஒளிபரப்பாக உள்ளது என்பது வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் தெரியவருகிறது.
அப்பா - மகன்கள் கதைக்களம் :
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2ல் ஸ்டாலின் முத்து அப்பாவாகவும் அவரின் மனைவியாக நிரோஷாவும் நடிக்கிறார்கள். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அப்பா மீது பயம் கலந்த மரியாதை கொண்ட மகன்களாக ப்ரோமோவில் காட்டப்படுகிறார்கள். "பிள்ளைகளை வளர்த்தா என்னைப் போல வளர்க்கணும்" என்கிறார் அப்பா ஸ்டாலின்.
தொடரும் சீசன் 2 ட்ரெண்ட்:
திரைப்படங்களைப் போலவே வர வர சின்னத்திரை சீரியல்களில் கூட இரண்டாவது சீசன் வர துவங்கிவிட்டது. ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, பாரதி கண்ணம்மா சீரியல்களைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் சீசன் 2 விரைவில் ஒளிபரப்பாகி பேமிலி ஆடியன்ஸை கவரப் போகிறது என்பது உறுதி!