புதுமைக்கு பெயர் போன தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி. விதவிதமான வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களை வழங்குவதில் அவர்களை அடித்து கொள்ள ஆளே இல்லை. ஒரு நிகழ்ச்சி முடிவதற்கு முன்னரே அடுத்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாக துவங்கிவிடும். அதே போல தான் சீரியல்களும். முதல் பாகம் முடிந்தவுடன் அதன் இரண்டாம் பாகம் தொடங்கிவிடும். அந்த வரிசையில் புதிதாக ஒரு ரியாலிட்டி ஷோ துவங்க உள்ளது. அது தான் 'கதாநாயகி' நிகழ்ச்சி.
சூப்பர் சிங்கர் மூலம் சிறந்த பாடகர், டான்ஸ் ஷோ மூலம் சிறந்த டான்சர், பேச்சு போட்டி மூலம் சிறந்த பேச்சாளர், குக்கிங் நிகழ்ச்சி மூலம் சிறந்த குக் போல் "கதாநாயகி" நிகழ்ச்சி மூலம் சிறந்த கதாநாயகியை தேர்வு செய்யும் போட்டியாக இது இருக்கும். குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் அடுத்ததாக இந்த கதாநாயகி நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான முதல் ப்ரோமோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
வெள்ளித்திரையில் பிரபலமாக இருந்து பின்னர் வாய்ப்பு குறைந்த பல நடிகர் நடிகையர்கள் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்து சக்சஸ்புல்லாக இருக்கிறார்கள். அந்த வகையில் முதல்முறையாக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சின்னத்திரையில் நடுவராக களம் இறங்குகிறார். அவருடன் இணைந்து நடுவர் பேனலில் கதாநாயகியை தேர்ந்து எடுக்க உள்ளார் நடிகை ராதிகா. விஜய் டிவியில் வரும் ஜூலை 29ம் தேதி துவங்கவுள்ள இந்த நிகழ்ச்சி வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
கதாநாயகி நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் ராதிகா மற்றும் கே.எஸ். ரவிக்குமார் இருவரும் காரில் இருந்து இறங்கி வர அவர்களை கடல் போல சூழ்ந்து உள்ளது ரசிகைகளின் கூட்டம். அனைவர் முகத்திலும் கண்ணம்மா, பாக்கியலட்சுமி, காவியா உருவம் கொண்ட மாஸ்குகள் அணிந்துள்ளனர். ரசிகைகள் நடுவர்களிடம் எங்களுக்கு இவர்களை போல ஒரு கதாநாயகியை தெரிந்து எடுத்து கொடுங்கள் என ரெக்வஸ்ட் செய்கிறார்கள். கே.எஸ். ரவிக்குமார், கதாநாயகியை தேர்ந்தெடுப்பது ஒரு பெரிய வேலையாக இருக்கும் போல இருக்கே என சொல்ல ராதிகா பார்த்து கொள்ளலாம் என்று கூறுகிறார்.
விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றால் உடனே அவர்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி விடுவார்கள். அந்த வகையில் இந்த 'கதாநாயகி' நிகழ்ச்சி மூலம் பங்கேற்கும் போட்டியாளர்களும் விரைவில் செலிபிரிட்டிகளாக மாறிவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த நிகழ்ச்சி நிச்சயம் வார இறுதி நாட்களை குதூகலமாக வைத்து இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.