நீயா? நானா?
பிக் பாஸ், அது இது எது, ஸ்டார் மியூசிக் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் “நீயா நானா” (Neeya Naana). சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை, சாதாரண மனிதர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, ஆராயும் நிகழ்ச்சியாக நீயா நானா பல ஆண்டுகளாக லைக்ஸ் அள்ளி வருகிறது.
வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த ஷோவை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை பலதரப்பட்ட தலைப்புகள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில், 'அடிக்கடி நகை வாங்கும் குடும்ப தலைவிகள்' மற்றும் 'நகை வாங்குவதை கேள்வி கேட்கும் குடும்ப தலைவர்கள்' என்ற தலைப்பின் கீழ் இந்த வாரம் விவாதிக்கப்பட்டது.
அதிர்ச்சியில் கோபிநாத்:
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பல சுவாரஸ்ய விஷயங்கள் நடந்தது. சிலர் தங்களது உழைப்பில் நகைக்சீட்டு போட்டு வாங்கியது, மாமியார், கணவர் திருமணப் பரிசாக அளித்ததது, காதலித்தபோது கொடுத்தது என பல சுவாரஸ்ய சம்பவங்களை பெண்கள் பகிர்ந்துக் கொண்டனர். மேலும், இதில் ஒரு சில பெண்கள் தங்கள் அணிந்திருந்த நகைகளை பற்றிய தகவல்களை கூறினர். முதலில் ஒரு பெண் கூறியதாவது, "என் குடும்பத்தில் வித்தியாசமானதாக தெரியணும்னு ரூபிக் என்ற நகை செட்டை வாங்கினேன்" என்று கூற, கோபிநாத் “நீங்கள் எவ்வளவு சரவன் நகை இப்போ அணிந்திருக்கீங்க” என்று கேட்டார். இதற்கு அந்த பெண், ED Raid ஏதும் வரவச்சிட போறீங்க” என்று சிரித்தப்படி கூறினார்.
"பாதுகாப்பை உணர்வை தருகிறது”
இதனைத் தொடர்ந்து, மற்றொரு பெண், நீயா நானாவில் இன்றைய ஷோவில் கலந்து கொள்வதற்காக எட்டரை சவரன் ஆரத்தை முந்தைய நாள் இரவு 8 மணிக்கு சென்று வாங்கியதாக பெருமையுடன் கூறினார். இதற்காக தான் 5.85 லட்ச ரூபாய் செலவு செய்ததாக அவர் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் கோபிநாத். “நிகழ்ச்சியின் ஆங்கராக பல ஆண்டுகள் இருந்து வருகிறேன். எனக்கு ஒரு மோதிரம் கூட இல்லை” என்று அவர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், ஒரு பெண் ஒட்டியாணம் வாங்குவதற்காக 14 கிலோ உடல் எடையை குறைத்ததாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய பெண்கள், நகைகள் வாங்குவது தங்களுக்கு ஒரு பாதுகாப்பை உணர்வை தருகிறது என்றும், பெண்களின் சொத்ததாக நகைகள் தான் உள்ளது என்று கூறினர். ஆண்கள் சொத்தாக வீட்டை வாங்கினால் அவர்கள் பெயரில்தான் அதை பதிவார்கள். மேலும், தங்களிடம் உள்ள நகைகள் சந்தோஷத்தையும், தைரியத்தையும் தருவதாக பெண்கள் குறிப்பிட்டனர். ஒரு வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மொய்யாக வைக்கப்படும் தங்கம் மீண்டும் தங்களது வீட்டு விசேஷங்களில் தங்கமாகவே திரும்பும் என்பதையும் தெரிவித்தனர்.