தனக்கு வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் சிறப்பான நடிப்பேன் நாதஸ்வரம் சீரியலில் காஜாவாக நடித்த கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான மெகாத்தொடர் நாதஸ்வரம். திருமுருகன் இயக்கி நடித்த இந்த சீரியலில் மௌலி, பூவிலங்கு மோகன், மகாநதி ஷங்கர், ஷ்ருதி சண்முகபிரியா, ஸ்ருதிகா என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். இந்த சீரியலில் பெரும்பாலான நபர்கள் புதுமுகங்களாக அறிமுகமாகியிருந்தனர். அதில் காஜா என்ற கேரக்டரில் நடித்த கார்த்திக்கும் ஒருவர். அதன்பின் அவர் எந்த சீரியலிலும் பெரிதாக நடிக்கவில்லை.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய கார்த்திக் தனக்கு அந்த சீரியலில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி பேசியுள்ளார். அதில், “நாங்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். எனக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நான் 10ஆம் வகுப்பு பெயிலானதால் செல்போன் கடையில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கிருந்த பூபதி என்ற சர்வீஸ் செய்யும் நபருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். அவர் தான் நான் சீரியல் போகவே காரணமாக அமைந்தவர். பேப்பரில் வந்த நாதஸ்வரம் சீரியலுக்கான ஆள் தேடல் விளம்பரத்தை ஒருநாள் என்னிடம் காட்டினார். நீ நடிக்க ஆசைப்பட்டு தானே இருக்கிறாய். அதனால் முயற்சி செய் என சொன்னார். எனக்கு சென்னை வந்த பிறகு தான் ஆடிஷன் என்றால் என்ன என்பதே தெரிந்தது.
நான் ஓனரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு விட்டு வரவா என கேட்டேன். அவர் அரை மனதுடன் போய்ட்டு வா என சொன்னார். ஒரு கல்யாண மண்டபத்தில் தான் ஆடிஷன் நடந்தது. தருமபுரியைச் சேர்ந்த நான் கோவையில் நடந்த ஆடிஷன் சென்றேன். கிட்டதட்ட 40 ஆயிரம் பேர் இருந்தார்கள். 3 ரவுண்டு அந்த ஆடிஷன் நடந்தது. நான் நடிச்சி காட்டியது அனைவருக்கும் பிடித்தது. திருமுருகன் சார் என்னிடம் சின்னதா ஒரு கதை ரெடி பண்ணிட்டு வந்து சொல் என சொன்னார். அதை கதையாக ரெடி பண்ணி சொன்னேன்.
என்னுடைய பயோ டேட்டாவை வாங்கி வைத்துக் கொண்டு சரியாக சொன்னபடி 15 நாட்களில் ஷூட்டிங்கிற்கு அழைத்தார். நான் அந்த சீரியலில் காஜா பையனாக நடித்தேன். திருமுருகன் சார் நம்மிடம் உரிமை எடுத்து தான் பழகுவார். சாப்பிடவில்லை என்றாலும் திட்டுவார். காரைக்குடியில் அந்த ஷூட்டிங் நடந்த நிலையில் அங்கு என்ன ஸ்பெஷல் உணவோ அதையெல்லாம் சமைத்து கொடுப்பார். என்னையெல்லாம் நன்றாக தாங்குவார்.
கொரோனா பிரச்சினையால் திருமுருகன் மறுபடியும் ஷூட்டிங் தொடங்கவில்லை.அவர் ஆரம்பித்தவுடன் மீண்டும் நடிக்க சென்று விடுவேன். அதுவரை பொருளாதார பிரச்சினையை சமாளிக்க செல்போன் கடையில் வேலை செய்கிறேன். நாதஸ்வரம் சீரியல் விட்டு போகும்போது கல்லூரியில் இருந்து போனது போல இருந்தது” என கூறியுள்ளார்.