மலையாள சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் பிரியா (Malayalam Actress Dr. Priya). ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ள பிரியா அடிப்படையில் ஒரு மருத்துவர் ஆவார். 35 வயதான பிரியா நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் இன்று தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்.
அவரின் இழப்பு மலையாளத் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் உயிர் இழந்தார். அவரின் இழப்பால் அதிர்ச்சியில் இருந்த மலையாள திரையுலகத்தினருக்கு மற்றுமொரு நடிகையை பறிகொடுத்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'கருத்தமுத்து' என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான பிரியா தனது திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். பிரியாவின் கருவில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் உயிருடன் மீட்டு தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தனது ஒரே மகளை இழந்த பிரியாவின் தாயார் இந்த துக்கத்தை தாங்கமுடியாமல் தவித்து வருகிறார். கடந்த ஆறு மாதங்களாக வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட வரது கணவர் மிகுந்த வேதனையில் இருக்கிறார்.
சமீபத்தில் தான் மாதாந்திர செக் அப்புக்காக மருத்துவமனைக்கு பிரியா சென்று வந்துள்ள நிலையில், திடீரென அவருக்கு எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. முதல் குழந்தையை வரவேற்க ஆவலுடன் காத்திருந்த பிரியாவுக்கு இப்படி ஒரு சோகம் நடந்துள்ளதை நினைத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகத்தினர் வேதனையில் உள்ளனர்.
பிரியாவின் இந்த மரண செய்தியை சக நடிகரான கிஷோர் சத்யா தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் வருத்தடன் தெரிவித்துள்ளார். மேலும் “கடவுள் ஏன் இது போன்ற ஒரு கொடூரத்தை ஒரு 35 வயதேயான கர்ப்பிணிக்கு செய்ய வேண்டும்” என வேதனையுடன் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கிஷோர் சத்யாவின் போஸ்ட்டில் ரசிகர்கள் பலரும் பிரியாவுக்கு இரங்கல் தெரிவித்தும் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர்.