சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வரும் தொடர் எதிர் நீச்சல். இயக்குநர் திருச்செல்வம் இயக்கும் இந்த தொடர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு நாளுக்குநாள் அதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இந்த சீரியல் மாபெரும் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது அதன் கதைக்களம் மற்றும் நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு. அந்த வகையில் எதிர் நீச்சல் சீரியலின் ஹீரோ என்றால் அது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து தான்.


 



பன்முக திறமைசாலி :


உதவி இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என பன்முகம் கொண்ட திறமைசாலியாக விளங்கிய மாரிமுத்து பல ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு இரண்டு திரைப்படங்களை இயக்கினார். அப்படங்கள் தோல்வியை சந்தித்ததால் தனது கவனத்தை நடிப்பின் மீது திருப்பினார். பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள மாரிமுத்துவிற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்தது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' படத்தில் கதாநாயகியின் தந்தை கதாபாத்திரம். 


திரைப்படங்களில் பிஸி :


சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் கூட குறிப்பிடும் படியான முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தவிர ஏராளமான திரைப்படங்களில் ஒப்பந்தமாகியும் உள்ளார். சின்னத்திரையில் 'எதிர் நீச்சல்' சீரியல் மூலம் அடியெடுத்து வைத்த பிறகு அவர் மிகவும் ட்ரெண்டிங் பர்சனாலிடியாகவே மாறினார். குறிப்பாக அந்த சீரியலில் அவரின் மேனரிசம், அவரின் வசனங்கள் உள்ளிட்டவை சோசியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டிங்காகி அதுவே அவரின் அடையாளமாக மாறிப்போனது.


கோடிக்கணக்கில் ரசிகர்கள் :


எதிர் நீச்சல் சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங் உயர்வதற்கும் மிக பெரிய காரணியாக இருந்தது மாரிமுத்துவின் அசத்தலான நடிப்பு என்றால் அது மிகையல்ல. ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அதற்கு காரணம் அவர் மாரிமுத்து என்றால் அடையாளமே மறந்து போகும் அளவுக்கு குணசேகரனாகவே அனைவர் மத்தியில் பதிந்து விட்டார். 


 



மாரிமுத்து மரணம்: 


இந்த நிலையில் தான் இரு தினங்களுக்கு முன்னர் 'எதிர் நீச்சல்' சீரியலுக்காக டப்பிங் பேசி கொண்டு இருந்த சமயத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் உயிரிழந்தார். அவரின் இந்த எதிர்பாராத திடீர் மரணம் திரையுலகத்தினர், சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் இந்த ஈடு செய்ய முடியாத இழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த குணசேகரன் யார்?   


இந்த நிலையில் எதிர் நீச்சல் தொடரின் அடுத்த குணசேகரனாக யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் மாரிமுத்துவுக்கு இணையான ஒரு நடிகரை ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திக்கு தேர்ந்தெடுப்பது என்பது மிகப்பெரிய சவாலாகவே இருக்கப்போகிறது. அந்த வகையில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் மற்றும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தேர்ந்து எடுக்கப்படலாம் என்ற பேச்சுவார்த்தை சின்னத்திரை வட்டாரத்தில் பரவலாக அடிபடுகிறது. அவரின் குரல்வளமும், தோற்றமும் மறைந்த நடிகர் மாரிமுத்துவுடன் ஒத்துப்போவதால் அவர் நடிக்க கூடும் என கூறப்படுகிறது. 



இது குறித்து நடிகர் வேல ராமமூர்த்தி கூறுகையில் தனக்கு எதிர் நீச்சல் தொடரின் நடிக்க அழைப்பு வந்துள்ளதாகவும் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருவதால் முடிவை இன்னும் உறுதி செய்யவில்லை என்றும் பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.  ரசிகர்கள் மத்தியில் அடுத்த குணசேகரன் யார் என்பது குறித்த கேள்வி கேள்விக்குறியாகவே உள்ளது.