பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நடிகர் சதீஷ் விலகவுள்ளதாக தெரிவித்த நிலையில், அந்த கேரக்டரில் யார் நடிக்க உள்ளார் என்பது குறித்து இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் சின்னத்திரை சீரியல்களில் ஒன்று “பாக்கியலட்சுமி”. விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வருகின்றனர். முதலில் ராதிகா கேரக்டரில் நடித்தவர் நடிகை ஜெனிஃபர். அவர் தனது பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகிய பிறகு, நடிகை ரேஷ்மா உள்ளே வந்தார்.
டிஆர்பி தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் எதிர்பாராத வகையில் பல திருப்பங்களுடன் சென்று வருகிறது. இதனிடையே சில தினங்களுக்கு முன்பு நடிகர் சதீஷ்குமார்,இந்த சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கும் அவர், தனது கொடுக்கப்பட்ட கோபி கேரக்டரில் அசத்தலான நடிப்பை வழங்கி அனைவரிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
நடிகர் சதீஷ் விலகல்
சமூக வலைத்தளங்களில் சதீஷை ஒரு பக்கம் ரசிகர்கள் கண்டபடி திட்டினாலும், மற்றொருபுறம் அவரின் நடிப்புத் திறமையை புகழ்ந்துகொண்டும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில் கடந்த ஒரு மாதமாகவே பழனிசாமி எனும் கதாபாத்திரத்தில் நடிகர் ரஞ்சித் பாக்கியலட்சுமி சீரியலில் எண்ட்ரி கொடுத்துள்ள நிலையில் சதீஷூக்கான காட்சிகள் குறைவாகவே இருந்தது, ஆனால் ரஞ்சித் நடிக்க வந்தது மகிழ்ச்சியாக உள்ளதாக கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு விரைவில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகப்போவதாக சதீஷ் தெரிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவரிடம் சமூக வலைத்தளங்களில் ஏன் விலகுகிறீர்கள் என கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். வாழ்க்கையில் பேசி தீர்த்துக்க முடியாத பிரச்னை அப்படின்னு எதுவுமில்லை. எவ்வளவு பெரிய பிரச்னை என்றாலும் நண்பர்களுடனும், நமக்கு வேண்டப்பட்டவர்களோடு உட்கார்ந்து பேசினால் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.நான் என்ன சொல்ல வர்றேன்னு? என முதலில் வெளியான வீடியோவில் பேசியிருந்தார்.
மற்றொரு வீடியோவில் இன்பாக்ஸில் நிறைய பேர் ஏன் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகுறேன்னு கேட்டாங்க. ஆதேசமயம் போகாதீங்கன்னு சொல்லி நிறைய வேண்டுகோள் வருது. அன்பு நெஞ்சங்களுக்கும், அன்புக்கும் ரொம்ப நன்றி என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரசிகர்கள் மற்றும் விஜய் டிவி நிர்வாகம் வேண்டுகோளுக்கிணங்க, சதீஷ் மீண்டும் பாக்கியலட்சுமி தொடரில் தொடர இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் நடிகர் பப்லு இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கிறார் எனவும் சொல்லப்படுவதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.