சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அதில் நடித்த நடிகர் சமூக வலைத்தளத்தில் போட்ட உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்திழுப்பதில் சின்னத்திரை சீரியல்களுக்கு என்றும் முக்கிய இடமுண்டு. தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு கொள்ளும் அளவுக்கு காட்சிகள் இருப்பதால் ஆண்டுகள் பல ஆனாலும் அந்த சீரியல்கள் பற்றி எப்போது நினைத்தாலும் பக்கம் பக்கமாக பேசும் அளவுக்கு பசுமையான நினைவுகளை சீரியல்கள் உருவாக்கி வைத்துள்ளது. பலராலும் சீரியல்கள் முடிவடைவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. புது சீரியல்கள் வந்தாலும் முடிந்துபோன சீரியல் மாதிரி இல்லை என சிலாகித்து கொள்வார்கள்.
அந்த வகையில் சன் டிவியில் கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ‘ரோஜா’ சீரியல் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த சீரியலில் இடம்பெற்ற அர்ஜூன், ரோஜா இடையிலான காதல் காட்சிகள் இளைஞர்களை கூட பார்க்கும் அளவுக்கு கட்டிப் போட்டது. இதில் அர்ஜூனாக சிபு சூர்யன், ரோஜாவாக பிரியங்கா நல்கார், வில்லி அனுவாக விஜே அக்ஷ்யா, காயத்ரி சாஸ்திரி , வடிவுக்கரசி ,ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இதனிடையே ரோஜா சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் தான் ரோஜா சீரியல் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதுதொடர்பாக சிபு சூர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான்கரை ஆண்டுகளில் 100க்கும் அதிகமான நினைவுகள், அன்பும் நிறைந்த அழகான பயணம். ரோஜா சீரியலில் எனது பகுதியின் இறுதி படப்பிடிப்பை இன்று முடித்த நிலையில், அதிகமாக ரசிகப்பப்பட்ட அர்ஜூன் கதாபாத்திரத்தை என்னை நம்பி, எனக்கு அளித்த சரிகமா நிறுவனத்துக்கும், சன் டிவி-க்கும் நன்றி. ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. விரைவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதேபோல பிரியங்கா நல்கார் வெளியிட்டுள்ள பதிவில், என் வாழ்க்கையில் இந்த நான்கரை வருடங்கள் மறக்க முடியாத பயணம்! ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியாமா இங்க வந்தா என்ன, நீங்க எல்லாரும் என்ன உங்க வீட்டு பொண்ணா ஏத்துகிட்டீங்க. இத்தனை வருஷத்துல நிறைய நிறைய அன்பும் பாசமும் எனக்கு நீங்க எல்லாரும் கொடுத்துருக்கீங்க. உங்களோட அன்புக்கு நான் என்ன செய்ய போறேன்னு தெரியல. ஆனா இந்த அன்பெல்லாம் பாக்குறப்ப நான் பாக்கியசாலின்னு தோணுது!
மேலும் சீரியலில் மட்டுமின்றி உங்கள் அனைவரின் இதயத்திலும் ரோஜாவாக இருக்க எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த சரிகம மற்றும் சன் டிவிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இது முடிவில்லாதது! இன்னொரு புதிய ஆரம்பம்! விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.