சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மே 23) எபிசோடில் தாராவுக்கு தாய்மாமன் மடியில் வைத்து காது குத்துவது குறித்த பேச்சு அடிபடுகிறது. "தாய் மாமன் என யாரு இல்லை. நான் ஒரே பொண்ணு. என்னோட பிள்ளை நல்லா இருக்கனும் என நினைக்கிற ஈஸ்வரி அக்கா மடியில உட்கார வைத்து காது குத்தாலம்"  என நந்தினி தன்னுடைய விருப்பத்தை சொல்கிறாள். பொம்பளை மடியில் வைத்து சடங்கு செய்வது குறித்து பங்காளிகள் குறை பேச அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கிறாள் ரேணுகா.

குணசேகரன் கோயிலுக்குள் என்ட்ரி கொடுக்கிறார். நந்தினியின் அப்பாவும்  ஈஸ்வரியின் அப்பாவும் சென்று அவரை வரவேற்க தம்பிகள் மூவரையும்  அனைவரின் முன்னிலையில் அவமானப்படுத்தி பேசுகிறார். "என்ன வேணுமோ செஞ்சிட்டு போங்க. எனக்கு எந்த கவலையும் இல்லை" என குணசேகரன் சொல்ல "கவலை இல்லாதவர் ஏன் இந்த வரணும்" என ஞானம் கேட்கிறான். ஜான்சி ராணி தலையிட்டு "அண்ணன் நான் போடுற அன்னதானத்துக்கு தலைமை தாங்க வந்து இருக்கிறார்" என நக்கலாக சொல்கிறாள்.


 




ஒரு வழியாக காதுகுத்து நல்லபடியாக நடந்து முடிகிறது. குணசேகரன் காதில் இருந்து புகை வரும் அளவுக்கு கடுங்கோபத்தில் வெறிக்க பார்த்து கொண்டு இருக்கிறார். அனைவரையும் பந்திக்கு அழைக்கிறார்கள். மொய் எழுதுவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். உறவுக்காரர்கள் அனைவரும் குணசேகரனுக்கு தான் மதிப்பு இவர்கள் அனைவரும் செல்லாக்காசு என சொல்லி அவமானப்படுத்துகிறார்கள். மொய் எழுதாமலேயே சாப்பிட போகிறார்கள். நந்தினியும் கதிரும் மொய் பணம் வரவில்லையே என பதட்டத்துடன் இருக்கிறார்கள். அதை பார்த்து குணசேகரன், ஜான்சி ராணி மற்றும் கரிகாலன் சந்தோஷப்படுகிறார்கள். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் கதைக்களம்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய (மே 24 ) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

மொய் பணம் எழுதாமலேயே சாப்பிட்டுவிட்டு தேவையில்லாத பேச்சுக்களை பேசிவிட்டு போகும் உறவுக்காரர்களை பார்த்த நந்தினிக்கு ஆத்திரம் பொங்கி வர அழுது கொண்டே "நீங்க எல்லாரும் மட்டும் போதும். எனக்கு வேற யாரும் வேணாம். எவனாவது நான் நல்லா இருக்கும் போது என்னோட வீட்டு வாசலில் வந்து நின்னான் அவன் காலை வெட்டிவிடுவேன்" என கொந்தளிக்கிறாள். அவளை அனைவரும் சமாதானம் செய்து வைக்கிறார்கள்.


 




இது அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்த குணசேகரன் உடனே அங்கிருந்து கிளம்ப பின்னாடியே சென்ற ஜான்சி ராணி "அன்னதானத்தை ஆரம்பிச்சு வைச்சுட்டாவது போங்க அண்ணன்" என கெஞ்சுகிறாள். "சும்மா இருந்தவனை கூட்டிட்டு வந்து கேவல படுத்திட்டு" என ஜான்சி ராணியையும், கரிகாலனையும் திட்டிவிட்டு காரில் ஏறி கிளம்புகிறார்.


 





கதிர் நந்தினியின் அப்பாவை கட்டியணைத்து மன்னிப்பு கேட்கிறான். "எனக்கு மகன் இல்லப்பா. நீ தான்யா எனக்கு மகன். நீ திட்டினா தாங்கிக்க மாட்டேனா?" என சொல்லி சமாதானம் செய்ய கதிர் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.