சின்னத்திரை பிரபலங்களும் சமீப காலமாக மிகவும் பிரபலமான செலிபிரிட்டிகளாக வலம் வருகிறார்கள். அவர்களின் சோசியல் மீடியா பக்கங்களையும் எக்கச்சக்கமான ஃபாலோவர்ஸ் பின்தொடர்ந்து வருகிறார்கள். குடும்பத்தில் ஒருவராகவே சீரியல் நட்சத்திரங்கள் பார்க்கப்படும் அளவுக்கு மிகவும் நெருக்கமாக மனதில் பதிந்து விடுகிறார்கள். அதே போல நட்சத்திரங்களும் அவர்களின் குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது என அனைத்தையும் ரசிகர்களுடன் வீடியோ, ஃபோட்டோ மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அப்படி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி அசோக் (Sridevi Ashok). தனுஷின் 'புதுக்கோட்டையில் இருந்து சரவணன்' படத்தில் துணை ஆர்டிஸ்டாக அறிமுகமானார். சன் டிவியில் 2007ம் ஆண்டு ஒளிபரப்பான 'செல்லமடி நீ எனக்கு' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இளவரசி, பிரிவோம் சந்திப்போம்,வாணி ராணி, கல்யாணப் பரிசு, பூவே பூச்சூடவா, கல்யாணம் முதல் காதல் வரை, செம்பருத்தி, ராஜா ராணி, பூவே பூச்சூடவா, பூவே உனக்காக, அரண்மனை கிளி, காற்றுக்கென்ன வேலி உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மோதலும் காதலும் மற்றும் பொன்னி சீரியலில் நடித்து வருகிறார். நடிகை ஸ்ரீதேவிக்கும் அசோக் என்பவருக்கும் 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியினருக்கு ஏற்கனவே சித்தாரா என்ற ஒரு பெண், குழந்தை இருந்த நிலையில் இரண்டாவதாக ஸ்ரீதேவி அசோக் கர்ப்பமானார். கர்ப்பத்தை அறிவித்தது ஏழாவது மாதம் நடைபெற்ற வளைகாப்பு வரை, போட்டோஷூட் என அனைத்து புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
கர்ப்பமாக இருந்த போதிலும் விஜய் டிவி சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த ஸ்ரீதேவி அசோக், டெலிவரி நாள் வரும் வரை நடித்து வந்தார். மோதலும் காதலும் சீரியலில் இருந்து ஸ்ரீதேவி விலகிய பிறகு அவரின் கதாபாத்திரத்தில் நடிகை கிருத்திகா நடித்து வருகிறார்.
ஸ்ரீதேவி கணவர் மற்றும் மகளுடன் பகிரும் வீடியோ மற்றும் ஃபோட்டோ அனைத்திற்குமே எக்கச்சக்கமான லைக்ஸ்கள் குவியும். டெலிவரிக்கு பிறகு மீண்டும் சீரியலில் தொடர்வாரா, இல்லையா என்பது குறித்து தெரியவில்லை.
இந்நிலையில் இன்று ஸ்ரீதேவிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை குழந்தையின் கை கொண்ட புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த போஸ்ட் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களையும் ஹார்ட்டின்களையும் பறக்கவிட்டு வருகிறார்கள். “தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்! எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.