நன்கு படித்து பல்கலைக்கழக அளவில் முதன்மையாக பட்டம்பெறும் ஜனனி, மதுரையில் இருக்கும் ஒரு பிற்போக்கான குடும்பத்துக்கு, மருமகளாக வந்து படும் அவஸ்தைகளும், தடைகளை தகர்த்து அவளால் முன்னேற முடிகிறதா அல்லது உறவை முறித்துக்கொண்டு சுய முன்னேற்றத்துக்காக உழைக்கிறாளா என்பதுதான் எதிர்நீச்சலின் கதை..
ஜனனிக்கு கணவனாக சக்தியும், சக்தியின் அண்ணன்களாக ஆதி குணசேகரன் (மாரிமுத்து), கதிர், ஞானம் ஆகியோரும், மருமகள்கள் ஈஸ்வரி (ஃபைவ்ஸ்டார் கனிகா), ரேணுகா (ப்ரியதர்ஷினி), நந்தினி(ஹரிப்ரியா) ஆகியோரும் சேர்ந்து எதிர்நீச்சல் கதையை இன்னும் விறுவிறுப்பாக்குகிறார்கள்.
எபிசோட் 167-இல், ஈஸ்வரியின் 14 வயது மகள் தர்ஷினிக்கு திருமண ஏற்பாடு செய்கிறார்கள் ஆதி குணசேகரனும், அவரது தம்பிகளும் (போக்சோ என ஒரு சட்டம் இருப்பதே தெரியாமல், இன்றும் வாழும் பல நிஜ மனிதர்கள் சிலரைத்தான் ஆதி குணசேகரனும், அந்த மக்கு தம்பிகளும் வெளிப்படுத்துகிறார்கள்) . தர்ஷினியை பரீட்சைக்கு அழைத்துச்செல்லும் ஜனனியின் மீது அனைவரின் கோபமும் திரும்புகிறது. ஏற்கெனவே மன ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சக்தி மோசமாக கத்திவிட்டு, மயங்கி விழ, ஜனனியை அனைவரும் திட்டி தீர்க்கிறார்கள்.
இருக்கும் பிரச்சனை போதாதென்று, நடுவில் வரும் ஜனனியின் அப்பா நாச்சியப்பன், என் பொண்ணு வாழ்க்கைக்கு பதிலைச் சொல்லுங்க என வாண்டடாக வண்டியில் ஏறுகிறார். நியாயம், நீதி என்னும் வார்த்தைகளுக்கு அர்த்தம் அறியாத ஆதி குணசேகரனும், அவரது தம்பிகளும் நாச்சியப்பனை அடித்து, கழுத்தை பிடித்து வெளியில் தள்ளிவிடுவதாக ப்ரோமோ காட்சிகள் இருக்கின்றன. அடிவாங்கிவிட்டு கெளதமைச் சந்திக்கும் நாச்சியப்பன், தான் எடுத்த முடிவுகள் எல்லாமே ஜனனியின் வாழ்க்கைக்கு தீங்கு விளைவித்துவிட்டது என புலம்புகிறார். ’என்னை எப்படியெல்லாம் டார்ச்சர் பண்ண’ என்று சொல்லும் கெளதமின் மைண்ட் வாய்ஸ் நமக்கு நன்றாக கேட்கிறது.
பிள்ளைகளின் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் தாங்களே எடுத்துவிட்டு, அவர்களின் உணர்வுகளையும் தாங்களே முடிவு செய்வதும், அனைத்தையும் ஆணையிட்டு டைம் டேபிளாக நடத்துவதும் Toxic Parenting என்னும் விஷ வளர்ப்பிலேயே சேரும் என பலரும் தற்போது, சமூக வலைதளங்களில் நம்மால் பார்க்கமுடிகிறது. அதை நாச்சியப்பம், ரொம்ப லேட்டாக உணர்கிறார்
இது போதாதென்று, உன்னை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்தது உன் ப்ரெண்டாமே என சக்தி கேட்பதும், அதற்கு கெளதம் என ஜனனி பதில் சொல்வதைப்போலவும் ப்ரோமோ முடிகிறது.
ஜனனி இந்த வாழ்க்கையில் இருந்து சாதிக்கப்போவது என்ன? விவாகரத்து வாங்கிக்கொண்டு வெளியில் செல்லவேண்டியதுதானே என்பதுதான் பல நெட்டிசன்களின் கமெண்ட்ஸாக இருக்கிறது.