சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் முதல் நாள் எபிசோடில் ஐஸ்வர்யாவுக்கு முறை செய்ய சொல்லும் குணசேகரனிடம் கொந்தளிக்கிறாள் ரேணுகா. ஜனனியும் சக்தியும் கௌதமை சந்திக்க அவனிடம் கடுமையாக ஜனனி பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறார்கள். ஜீவானந்தம் பி.ஏவிடம் இருந்து கௌதமுக்கு அழைப்பு வருகிறது. இப்படி பரபரப்பான கட்டத்துடன் முடிவடைந்த எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். 


 



ஐஸ்வர்யாவிடம் பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு குறித்தும் அடக்குமுறை குறித்தும் பேசுகிறாள் ஈஸ்வரி. இந்த வீட்டில் நடப்பதை பார்த்து நீ தேங்கி இருந்து விட கூடாது. உன் வாழ்க்கைகாக நீ தான் ஓடணும் என ஐஸ்வர்யாவின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கிறாள். வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் வெளியில் உட்கார்ந்து இருக்க நந்தினி வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறாள். 


குணசேகரன் நந்தினியிடம் "எவ்வளவு நேரம் வீட்டுக்கு விருந்துக்கு வந்த மாப்பிள்ளையை பசியோட உட்கார வைத்து இருப்பது" என கேட்கிறார். அதற்கு நந்தினி நக்கலாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் நான் தனியாக இந்த வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்கிறேன் என கிண்டல் செய்கிறாள். வாங்க ஹோட்டல்ல போய் சாப்பிடலாம் என கதிர் அழைக்க நந்தினி உடனே மாப்பிள்ளையை ஹோட்டல்ல கூட்டிட்டு போய் சாப்பிட வைச்சா நல்லவா இருக்கும். ஊரே நம்ம வீட்டு கல்யாணம் பற்றி தான் பேசுது. சோசியல் மீடியா மூலம் நாலு லட்சம் பேருக்கு தெரிஞ்சுடுச்சு என நக்கல் செய்கிறாள். 


ஜனனியும் சக்தியும் வீட்டுக்குள் வர "வந்துட்டாங்க பா ராஜாவும் ராணியும்" என்கிறார் குணசேகரன். நந்தினி உடனே "இங்க பாருங்க வந்தோமோ புது துணிய கொடுத்தோமா என போய்கிட்டே இருக்கனும்.  ஒத்தாசை செய்யுறேன் அது இதுன்னு இங்க நின்னுகிட்டு இருக்கக்கூடாது" என ஜாடையாக ஜனனிக்கு சிக்னல் கொடுக்கிறாள். 


கடுப்பான குணசேகரன் இந்தம்மா ஏய் இன்னும் ஒரு மணி நேரத்துல சமையல் முடியனும். பாவம் மாப்பிள்ளை எவ்வளவு நேரமா பசியில்  காத்துகிட்டு இருக்கான் என்கிறார் குணசேகரன். உடனே கரிகாலன் "ஆமா மாமா மாமியார் வீட்டுக்கு  சாப்பிட போறேன் என வேறு வயித்தோட வந்தேன். மயக்கமே வருது" என்கிறான். பயப்படாத சோறு போடுவாங்க என்கிறார் குணசேகரன். 


கௌதம் ஜீவானந்தத்தை பார்க்க செல்கிறான். ஜீவானந்தம்  பி.ஏ. பர்ஹானா வந்து கௌதமை அழைத்து செல்கிறாள். ஜீவானந்தம் காரில் பத்திரத்துடன் வந்து அங்கே காத்திருந்த அனைவரிடமும் அதை கொடுத்து அதை பத்திரமாக வைத்துக் கொள்ள சொல்கிறார். கொண்டு போய் நல்ல படிய பொழைச்சுக்கங்க என சொல்லி அனுப்பி வைக்கிறார். 


 




நந்தினி சமைக்கிறேன் என பெயரில் சும்மாவே பாத்திரங்களை உருட்டுகிறாள். கரிகாலன் உள்ளே ரூமுக்கு சென்று பசியில் சுருண்டு படுத்து கொண்டு இருக்கிறான். வீட்டில இருக்க பொம்பளைங்க எல்லாரும் ஒன்றாக சேர்ந்து உண்மையையே மறச்சு வைச்சு இருக்காளுங்க. அது வெளியே வரட்டும் அப்புறமா என்னுடைய ஆட்டத்தை பார்ப்பாங்க" என்கிறார். 


நந்தினி என்ன சமைக்கிற என கேட்க வரிசையா ஒவ்வொரு அசைவ டிஷ்ஷாக சொல்லி அனைவரின் பசியையும் ஏத்தி விட்டு கொண்டு இருக்கிறாள். ஹோட்டலில் மெனு சொல்வது போல அனைத்தும் சொல்லிவிட்டு நம்ம ஐஷு வயசுக்கு வந்து இருக்குறதால அசைவம் சமைக்க கூடாதுன்னு ஞாபகம் வந்துச்சு. அப்புறம் எல்லாத்தையும் முத்து அண்ணன் கிட்ட கொடுத்துடலாம்ன்னு இருக்கேன் என வெறுப்பேத்துகிறாள். 


வெறுப்பான குணசேகரன் "சரி மா சைவ சமையல் என்ன செஞ்சு  இருக்க?. அதையாவது எடுத்துக்கிட்டு வா" என்கிறார். "சோறு வடிச்சு ரசம் தாளிக்க போறேன்" என்றதும் சரி அடியாவது எடுத்துக்கிட்டு வா என்கிறார் குணசேகரன். 


ஜீவானந்தத்திடம் கௌதம் பேசுகிறான். என்னை சார் என கூப்பிட வேண்டாம் தோழர் என்று கூப்பிடுங்கள் என்கிறார் ஜீவானந்தம். உங்களுடைய அமைப்பில் சேர வேண்டும் என ஆசைப்படுகிறேன் என கௌதம் சொல்லிக்கொண்டு இருக்கும் போது ஜீவானந்தத்திற்கு போன் வருகிறது. பட்டம்மாள் கைரேகை எடுத்த பாத்திரங்கள் நாளை நம்முடைய பெயரில் வந்துவிடும் என பி.ஏ. சொல்கிறாள். அப்போது ஜீவானந்தம் பட்டம்மாள் பேத்தி என ஒரு பொண்ணு போன் பண்ணிகிட்டே இருக்கும் அந்த பொண்ணு பெயர் என்ன என கேட்க ஜனனி என்கிறாள் பி.ஏ. சரி அந்த பொண்ணு கைரேகையை எடுத்ததற்கு பிறகு போன் செய்யவே இல்லையே ஏன் என கேட்கிறார். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.