சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையின் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் தொடர் எதிர் நீச்சல். மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் அதன் இயக்குனர் திருச்செல்வம். 



ஆணாதிக்கம் நிறைந்த ஒரு குடும்பத்தில் படித்த பட்டதாரி பெண்களாக தேடி திருமணம் செய்து அவர்களை வீட்டில் அடிமைகளை போல நடத்தும் ஒரு கதாபாத்திரம். அடக்கு முறையை முறியடிக்கும் ஒரு பெண்ணின் பயணத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது எதிர் நீச்சல் தொடர். 


 




இந்த தொடரில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகமாகி வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக மிகவும் ஸ்வாரஸ்யமான கட்டத்தில் ஒளிபரப்பானது ஆதிரை அருண் திருமணம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அருண் - ஆதிரை திருமணம் கடைசியில் நடைபெறாமல் போனது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் இல்லதரிசிகள் மட்டுமின்றி குடும்ப தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கூட மிகவும் ஆவலாக பார்த்து வருகிறார்கள். 


இந்த சீரியலில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சாணக்யா சிறு வயது முதலே படங்கள், விளம்பரங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். நடிகை கீதா ஸ்ரீயின் மகனான சாணக்யா முதலில் நடித்தது மெட்டி ஒலி சீரியலில் கோபி - விஜயலட்சுமியின் மகனாக நடித்திருந்தார். சூர்யா - அசின் நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற 'கஜினி' படத்தில் அசின் நடித்த விளம்பர படம் ஒன்றில் அவரின் மகனாக ஒரு காட்சியில் தோன்றியிருப்பார். ஹீரோவாக ஜெய் நடித்த 'அவள் பெயர் தமிழரசி'  படத்தில் ஜெய்யின் சிறு வயது கதாபாத்திரமாக  ஒரு சில காட்சியில் நடித்திருந்தார். அஜித் நடித்த பரமசிவம் படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  


சின்னத்திரை தொடர் மற்றும் படங்களில் நடித்த சாணக்யா பல விளம்பரங்களிலும் தோன்றியுள்ளார். தற்போது எதிர் நீச்சல் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு முகமாக மாறியுள்ளார். 


எதிர் நீச்சல் தொடரில் ஆதிரைக்கு கரிகாலனுடன் கட்டாய திருமணம் நடத்த பிறகும் அருணுடன் ஆதிரை நிச்சயம் சேருவார் என ரசிகர்கள் இன்னும் எதிர்பார்க்கிறார்கள். இந்த தொடர் மூலம் மேலும் பல வாய்ப்புகள் சாணக்யாவுக்கு நிச்சயம் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.