உலக நாடுகள் தொடங்கி உள்ளூர் வரை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ்.  இந்தியாவில் இந்தி தொடங்கி தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.


இந்தியில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், சல்மான் கான் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.


தமிழில் நடிகர் கமல்ஹாசன் 2017ஆம் ஆண்டு முதல் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் நிலையில்,   கடந்த ஆறு சீசன்களாக வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக விளங்கி வந்துள்ளது பிக் பாஸ். மேலும் இடையே டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியை கமல் ஹாசன், சிம்பு இருவருமே தொகுத்து வழங்கினார்.


இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த சுவாரஸ்ய அப்டேட்கள் தற்போது வெளியாகி வருகின்றன. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்நிகழ்ச்சிக்காக நடிகர் கமல்ஹாசனுக்கு 130 கோடிகள் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


நடிகர் கமல்ஹாசன் ஒருபுறம் இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே, மணிரத்னம் உடனான படம் என வரிசைக்கட்டி படங்களில் பிஸியாகியுள்ள நிலையில்,  முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகின.


மேலும் சென்ற சீசனில் 90 கோடிகள் வரை கமலுக்கு வழங்கப்பட்டதாகவும், தற்போது பிஸியாக திரைத்துறையில் வலம் வரும் கமலுக்கு 130 கோடிகள் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளன.


இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கலாம் எனவும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் பிரபலங்கள் யார் யார் என்பது பற்றிய சுவாரஸ்யத் தகவல்களும் வெளியாகி வருகின்றன.


அதன்படி, தொகுப்பாளினி டிடி, நடிகை ரேகா நாயர், விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா, கலக்கப்போவது யாரு புகழ் சரத் தொகுப்பாளர் மாகாபா, நடிகை உமா ரியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்ளலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


இவர்களில் கடந்த மூன்று, நான்கு சீசன்களாகவே நடிகை உமா ரியாஸ் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த சீசனிலும் உமா ரியாஸ் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த சீசன் தொடங்கும் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Seenu Ramasamy: 'பொதுவெளியில் சாதி பெயரை கொண்ட பாடல்களை ஒலிபரப்ப தடை செய்யுங்க' - சீனு ராமசாமி வேண்டுகோள்