எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதுமட்டுமல்லாமல் பாக்யா குடும்பம் கொடைக்கானலுக்கு டூர் போக அங்கே தனது ஹனிமூனுக்காக கோபி-ராதிகா வருகை தருகின்றனர். ஆனால் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் பாக்யா கை ஓங்க ராதிகா டென்ஷனாகிறார். இவர்களை சமாளிக்க முடியாமல் கோபி திணறுகிறார். இப்படியான நிலையில் கடந்த ஒரு வார காலமாக தற்போது பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மகாசங்கமம் என காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் அது முடிவடைந்துள்ளது.
ஒருவழியாக முடிந்த மகாசங்கமம்
நேற்றைய எபிசோடில் கொடைக்கானல் டூர் முடிந்து பாக்யா குடும்பம், கோபி-ராதிகா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஆகியோர் ஊர்களுக்கு கிளம்பி சென்றனர். வீட்டுக்கு வருபவர்களுக்காக ஜெனி சமையல் செய்ய நினைக்கிறார். அப்போது செழியன் வந்து ஹோட்டலில் வாங்கி கொள்ளலாம் என சொல்ல, 3 நாட்களும் கடையில் சாப்பிட்டு இருப்பார்கள். அதனால் நானே செய்வேன் என ஜெனி சொல்கிறார்.
ஆனால் செழியன் செய்த ரொமான்ஸ் சம்பவத்தால் சாப்பாடு செய்ய வைத்திருந்த மாவு கீழே கொட்டி விடுகிறது. இதனால் அவரை திட்டி ஹோட்டலில் சாப்பாடு வாங்க ஜெனி அனுப்புகிறார்.
மாட்டிக்கொண்ட ஜெனி
பினனர் பாக்யா குடும்பம் வீட்டுக்கு வருகிறது. அனைவரையும் வரவேற்கும் ஜெனி 3 நாட்களாக வீட்டில் சமைக்காமல் வெளியேவும், தனது அம்மா வீட்டுக்கு சென்றதையும் சொல்கிறார். சமைக்க தெரியாத ஜெனியை அனைவரும் கிண்டல் செய்கின்றனர். அவர் பதிலுக்கு டூர் எப்படி இருந்தது என கேட்க, அனைவரும் அமைதியாகின்றனர். பாக்யா மட்டும் சூப்பரா போச்சு என சொல்லி சமாளிக்கிறார். பின்னர் அனைவரையும் ரெடி ஆகி வருமாறும் தான் சமைத்து வைப்பதாகவும் ஜெனி கூறி மேலே அனுப்புகிறார்.
ஆனால் இந்த பக்கம் செழியன் சாப்பாடு வாங்கிக்கொண்டு வெளியே இருந்து வருவதைப் பார்த்த எழில் பாக்யாவை ரகசியமாக அழைத்து திட்டத்தை போட்டுடைக்கிறார். இந்தப்பக்கம் வீட்டுக்கு வந்த ராதிகாவின் முகம் சரியில்லாததைப் பார்த்து அவரது அம்மா கோபியிடம் என்ன பிரச்சனை எனக் கேட்கிறார். கோபி என்ன சொல்வதென்று தெரியாமல் ஏதேதோ சமாளித்து தனது ரூமுக்கு செல்கிறார். இப்படியான காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.