பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை சந்திக்கும் கோபி அவருடன் சமாதானம் பேசும் காட்சிகளில் ரசிகர்கள் எதிர்பார்த்த ட்விஸ்ட் இன்று இடம் பெறுகிறது. 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது, அவரை நடுவீட்டுல் நிற்க வைத்து கேள்வி கேட்டது, பாக்யா வீட்டை விட்டு வெளியேறியது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து நகர்கிறது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 




பாக்யாவை சந்திக்கும் கோபி தான் செஞ்சது தப்பு தான் என கூறி சமாதானப்படுத்த முயல்கிறார். ஆனால் நான் இப்ப உங்ககூட வந்தா இனி என்ன பண்ணாலும் ஈசியா எடுத்துப்பேன்னு நினைக்கலாம். அதனால இதுமாதிரி திரும்ப பண்ணமாட்டேன்னு எனக்கு உத்தரவாதம் கொடுங்க என கூறி சத்தியம் பண்ணுங்க என்று கோபியிடம் பாக்யா கேட்கிறார். எப்படியாவது பாக்யாவை வீட்டுக்கு கூட்டிப் போகணும் என நினைக்கும் அவர் பொய் சத்தியம் பண்ணுகிறார். ஆனால் விதி சும்மாவிடுமா..


பாக்யாவிடம், “சத்தியமா நீ தான் என்னோட வாழ்க்கை ராதிகா” என சொல்ல ஒருகணம் பாக்யா, எழில், செல்வி 3 பேரும் அதிர்ச்சியடைகிறார்கள். சத்தியம் செய்ய வந்த கையை பாக்யா தடுக்க அவரும் தான் தப்பாக சொல்லியதை எண்ணி என்னசெய்வதென்று தெரியாமல் முழிக்கிறார். உடனே கோபியை பாக்யா வெளியே போக சொல்ல வேறுவழியில்லாமல் அவர் அங்கிருந்து புறப்படுகிறார். 


இதனைத் தொடர்ந்து மகன் எழிலை என்னை எங்கேயாவது வெளியே கூட்டிப்போ என சொல்லும் பாக்யா, கோபி - ராதிகா இடையேயான உறவு குறித்து உனக்கு எப்போது தெரியும் என மகன் எழிலிடம் கேட்கிறார். மறுபுறம் பாக்யா தன்னிடம் வருத்தப்பட்டு பேசியதை நினைத்து ராதிகா கவலைப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 


இனி வரும் எபிசோடில் வீட்டுக்கு செல்லும் கோபி பாக்யா வராதது குறித்து என்ன சொல்லி சமாளிக்க உள்ளார் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.