விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசனில் டைட்டில் பட்டத்தை அருணா கைப்பற்றியுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 


சூப்பர் சிங்கர் இறுதிப்போட்டி:


சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு சேனலும் ஒரே மாதிரியான தளத்தில் மாறுபட்ட முறையில் நிகழ்ச்சிகளை தர முயற்சித்து வருகின்றன. ஆனால் அவையாவும் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு முன்னால் வெற்றி பெறுவது கடினமே. அந்த வகையில் விஜய் டிவியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் 9வது சீசனும் கடந்த சில மாதங்களாகவே ஒளிபரப்பாகி வந்தது. 


விறுவிறுப்பாக நடந்த சூப்பர் சிங்கர் சீசன் 9ன் இறுதிப்போட்டிக்கு போட்டியாளர்கள் அருணா, அபிஜித், பூஜா, பிரியா, பிரசன்னா ஆகிய ஐந்து பேர் தேர்வாகினர். இவர்களில் யார் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. பிரமாண்டமான இறுதிப்போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில்  இன்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துக் கொண்டார். பல சுற்றுக்களாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதனால் போட்டியில் அனல் பறந்தது.






டைட்டில் வின்னர் அருணா:


இதில் அருணா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசனில் டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான வீடு வழங்கப்பட்டது. இந்த பரிசை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கினார். டைட்டில் ஜெயித்த அருணாவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். விரைவில் அருணா சினிமாவில் பாடகியாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.