விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா? நானா? நிகழ்ச்சியில் விஜயகாந்த் குறித்து ஒளிபரப்பான தொடர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் தனக்கென தனியிடம் பிடித்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீயா..நானா’ நிகழ்ச்சி. கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் இந்த விவாத நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமான தலைப்பில் ஒவ்வொரு வாரமும் விவாதம் நடைபெறும்.
இதனிடையே கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவே இல்லை. இதனிடையே விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு நீயா நானா நிகழ்ச்சியில் “சொக்கத்தங்கம் விஜயகாந்த்” என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் விஜயகாந்த் தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சட்டமன்றத்தில் எதிர்தரப்பில் அமர்ந்திருந்தால் கூட விஜயகாந்தின் எந்த பேச்சுக்கு நீங்கள் மேஜையை தட்டினீர்கள் என்ற கேள்வி வைகை செல்வனிடம் எழுப்பப்பட்டது. அதற்கு, ‘குடியாத்தம் சட்டமன்ற தொகுதி சம்பந்தமாக ஒரு கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. கேள்வி ஒன்றை எழுப்பினார். அங்குள்ள உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியை தரம் உயர்த்தி அரசு தருமா என கேள்வி கேட்டார். அதற்கு நான் தான் பதில் சொல்ல வேண்டும். அதாவது, ‘சிகப்பு கொடி ஏந்திய தோழரின் கேள்விக்கு அரசு பச்சைக்கொடி காட்டி விட்டது என நான் சொன்னேன். அதற்கு விஜயகாந்த் கைதட்டியதோடு மட்டுமல்லாமல் திரும்பி அவர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டார்.
‘இதேபோல் எல்லா இடங்களிலும் பச்சைக்கொடி காட்டுவீர்களா?’ என கேள்வி எழுப்பினார். நான், ‘ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, 3 கிலோ மீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, ஒரு 5 கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி, 8 கிலோமீட்டருக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி என்ற இலக்கு உள்ளது. அந்த இலக்கை முழுமையாக அடையும் வரை தொடர்ந்து அரசு பச்சைக்கொடி காட்ட முயற்சிக்கும்’ என சொன்னேன். அதனை விஜயகாந்த் வரவேற்றார்.
அவரது மரணம் வந்து ஏதோ ஒரு தாக்குதலை உள்ளத்தில் ஏற்படுத்தி சென்றது. எப்படிப்பட்ட மனிதர், எப்படிப்பட்ட உயரத்துக்கு வர வேண்டிய மனிதர் விஜயகாந்த். பேரரறிஞர் அண்ணா மறைந்தபோது, தத்துவ கவிஞர் குடியரசு ஒரு கவிதை எழுதினார். ‘மரணமே..காலத்தீயே.. மகிழ்ச்சியின் பகையே.. நாயே..மடங்காத திமிரே..சாவே.. உறவினை அறுக்கும் வாளே..உயிரினை குடுக்கும் வாயே.. எங்கள் அண்ணாவின் உயிரை குடித்து விட்டாயே’ என எழுதினார். அந்த கவிதை தான் விஜயகாந்த் மரணத்தின் போது எனக்கு தோன்றியது” என தெரிவித்துள்ளார்.